
திருச்சி மணிகண்டம் பகுதியில் இயங்கிவரும் ஆஷா புரா மர அறுவை ஆலை மற்றும் விற்பனை கடைக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த நபர் ஒருவர் கடையின் மேலாளர் திரேந்தரின் கைபேசியை பறிக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது அவர் சத்தமிடவே அந்த நபர் தப்பித்து சென்றுவிட்டார். மீண்டும் இரவு நேரத்தில் அதே நபர் சுவர் ஏறிக் குதித்து அறுவை மில்லுக்குள் நுழைந்துள்ளார். அப்போது பணியில் இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்களிடம் பணத்தை பறித்ததாக கூறப்படுகிறது.
சுதாரித்துக் கொண்ட பணியாளர்கள் அவரைப் பிடித்து கடுமையாகத் தாக்கி கட்டி வைத்தனர். இதில் திருட வந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மறுநாள் காலை உயிரிழந்தார்.

இதனையடுத்து அறுவை மில் மேலாளர் திரேந்திரன் மணிகண்டம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்ம நபர் உயிரிழந்த இடத்தை பார்வையிட்டு, உடலை உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
சம்பவத்தின் போது பணியிலிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சோகிது சேக், பைசல் ஷாக், மப்ஜில் ஹூக், ரசீதுல் ரஹ்மான் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் உயிரிழந்த நபர் திருச்சி துவாக்குடி பகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி (33) என்பது தெரியவந்தது. அவருக்கு திருமணமாகிவிட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் கொடுத்த மேலாளர் திரேந்திரனிடம் விசாரித்த போது அவர் வெளியூர் சென்று இரவுதான் வந்ததாக கூறினார்.
ஆனால் வழக்கில திடீர் திருப்பமாக மேலாளர் திரேந்திரன் தான், திருட வந்த இளைஞரை கட்டிவைத்து அடிக்க கூறியதாக பணியாளர்கள் விசாரணையின் போது தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவரையும் போலீஸார் கைது செய்தனர்.
newstm.in