அமைதி பேச்சுக்கு அதிபர் புதின் ஒப்புக் கொண்டால் ரஷ்ய பாதுகாப்புக்கு உத்தரவாதம் வேண்டும்: மேற்கத்திய நாடுகளுக்கு பிரான்ஸ் அதிபர் வேண்டுகோள்

பாரீஸ்: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தைக்கு அதிபர் புதின் ஒப்புக் கொண்டால், ரஷ்ய பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்குவது குறித்து மேற்கத்திய நாடுகள் பரிசீலிக்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் முடிவு செய்ததால், அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடுத்தது. அது இன்னும் தொடர்கிறது. இந்தப் போர் காரணமாக, உலகளாவிய பொருளாதாரத்தில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இரு நாடுகள் இடையே அமைதி பேச்சுவார்த்தை ஏற்படுத்தி, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் முயற்சிக்கின்றன.

இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவல் டி.வி.யில் ஆற்றிய உரையில், ‘‘நேட்டோ நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக ஆயுதங்களை குவித்து வருகின்றன. இது ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என ரஷ்ய அதிபர் புதின் கருதுகிறார்.

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தைக்கு அதிபர் புதின் ஒப்புக் கொண்டால், ரஷ்யாவுக்கு தேவையான பாதுகாப்பு உத்தரவாதம் குறித்து மேற்கத்திய நாடுகள் பரிசீலிக்க வேண்டும்’’ என்றார்.

ஆனால், இந்த விவகாரம் குறித்து அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘உக்ரைன் உடனான அமைதி பேச்சுவார்த்தையில் அதிபர் புதின் உண்மையாக இல்லை. பொது மக்களின் மின்சாரத்தை துண்டித்து, போரை காட்டுமிராண்டித்தனமாக ஆக்குகிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கே சோய்கு, பெலாரஸ் பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைன் போரில் நுழைய மாட்டோம் என பெலாரஸ் கூறியுள்ளது. ஆனால், உக்ரைன் எல்லை அருகே ரஷ்ய படைகளுடன் இணைந்து பாதுாப்பு பணியில் ஈடுபடுமாறு ராணுவத்தினருக்கு பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஸ் ஹென்கோ ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தார். உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டதால், ராணுவத்தை உக்ரைன் எல்லையில் நிறுத்தியதாக அலெக்சாண்டர் கூறினார்.

மக்கள் வெளியேற்றம்

ரஷ்யா தாக்குதலை தீவிரப் படுத்தலாம் என்பதால், தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் மாகாணத்தில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற உதவுவோம் என உக்ரைன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

உக்ரைனின் வடக்கு மற்றும் தென் பகுதியில் முன்னேறுவ தற்காக, உக்ரைனின் பக்மத் பகுதியை சுற்றி வளைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது என இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் குழப்பமான சூழல் நிலவுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.