சத்தீஸ்கர் அரசு மருத்துவமனையில் 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு| Dinamalar

அம்பிகாபுர், சத்தீஸ்கரில், அரசு மருத்துவமனையின் குழந்தைகளுக்கான சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நான்கு பச்சிளம் குழந்தைகள் நேற்று அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

இங்கு, சர்குஜா மாவட்டத்தின் அம்பிகாபுர் என்ற இடத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில், 35 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

இதில், நான்கு பச்சிளம் குழந்தைகள் நேற்று காலை 5:30 மணி முதல் 8:30 மணிக்குள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உயிரிழந்த நான்கு குழந்தைகளில், இரண்டு குழந்தைகளுக்கு, ‘வென்டிலேட்டர்’ எனப்படும் செயற்கை சுவாசக் கருவி வாயிலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்பட்டு வந்ததாகவும், இதன் காரணமாகவே குழந்தைகள் உயிரிழந்ததாகவும் பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதை, மருத்துவமனை தரப்பு மறுத்துள்ளது. இரவு 1:00 மணி முதல் 1:30 மணி வரை, மின் சப்ளையில் பிரச்னை இருந்ததாகவும், அது உடனே சரி செய்யப்பட்டதாகவும் மருத்துவமனை தரப்பு தெரிவித்தது.

மேலும், மின்சார தடை ஏற்பட்டாலும் அது குழந்தைகளுக்கான சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவை பாதிக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனி குழு அமைத்து, விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மாநில சுகாதாரத் துறை செயலருக்கு சுகாதாரத் துறை அமைச்சர் டி.எஸ்.சிங் தியோ உத்தரவிட்டு உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.