விஜய் – லோகேஷ் கனகராஜ் இணையும் ‘தளபதி 67’ படத்தின் பூஜை!

விஜய் – லோகேஷ் கனகராஜ் – லலித் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘தளபதி 67’ படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது வம்சி பைடிபள்ளியின் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளநிலையில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு வருகிற ஜனவரி 12-ம் தேதி வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இருவரும் இணையும் ‘தளபதி 67’ படத்தின் பூஜை இன்று சென்னை ஏவி.எம்.எம். ஸ்டூடியோவில் நடைபெற்றுள்ளது.

image

விஜய்யின் 67-வது படம் என்பதால் தற்காலிகமாக ‘தளபதி 67’ என்றுப் படத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ‘மாஸ்டர்’, ‘காத்து வாக்குல இரண்டு காதல்’, ‘கோப்ரா’, ‘மஹான்’ உள்ளிட்டப் படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸின் எஸ்.எஸ். லலித்குமார் தயாரிக்கிறார். ‘மாஸ்டர்’ வெற்றிக்குப் பிறகு, இந்தப் படத்தில் விஜய் – லோகேஷ் கனகராஜ், – லலித்குமார் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

மேலும் ‘மாஸ்டர்’ படத்திற்கு இசையமைத்த அனிருத், இந்தப் படத்திற்கும் இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த 4 நாட்கள் பட அறிவிப்புக்கான டீசர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்தப் படத்தின் பூஜை புகைப்படங்கள் மற்றும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.