
தென்காசியைச் சேர்ந்த சூர்யா (30) என்பவர் வீட்டில் இருந்தே வெளிநாடுகளுக்கு இசை தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அவருக்கு சமூக வலைதளம் மூலம் சென்னையை சேர்ந்த யோகா ஆசிரியர் சுவேதா என்பவர் அறிமுகமானார்.
பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். சூர்யா கொடைக்கானலில் காட்டேஜ் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டே இசை தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார்.
அப்போது அவரை பார்ப்பதற்காக சுவேதா கொடைக்கானல் வந்துள்ளார். அப்போது இருவரும் நெருங்கி பழகி வந்தநிலையில், சில நாட்களிலேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டு சுவேதா காதலை முறித்துக்கொண்டு சென்னை திரும்பியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் மூன்று மாதங்களுக்கு பிறகு கொடைக்கானல் வந்த சுவேதாவு சூர்யாவுடன் மீண்டும் பழகியுள்ளார். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி சூர்யாவுக்கு அடிபட்டுவிட்டதாக சுவேதா அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கும் தகவல் வெளியானது.
சம்பவத்தன்று இருவருக்கும் டி.வி பார்ப்பதில் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சுவேதா தனது ஆண் நண்பர்கள் 4 பேரை கொடைக்கானல் வரவழைத்துள்ளார்.

அப்போது சுவேதாவின் நண்பர்கள் அருகில் இருந்த கட்டையை எடுத்து சூர்யாவை பலமாக தாக்கியுள்ளனர். இதனால் நிலைகுலைந்த சூர்யா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
நீண்ட நேரமாகியும் எழுந்திருக்காததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் சுவேதா உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in