721வது ஆண்டு பெரிய கந்தூரி விழா முத்துப்பேட்டை தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலம்: கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் சேக்தாவூது ஆண்டவர் தர்காவில் 721வது ஆண்டு பெரிய கந்தூரி விழா கடந்த 25ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான புனித சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று அதிகாலை நடந்தது. நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணிக்கு டிரஸ்டிகள் இல்லத்திலிருந்து சந்தனம் நிரப்பிய குடங்களை தர்காவுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதிகாலை 2.30 மணிக்கு  புனித சந்தனகுடத்தை தலையில் சுமந்து வந்து கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டில் வைத்தனர். அதிகாலை 5 மணிக்கு சந்தன கூட்டிலிருந்து சந்தன குடம் தர்காவுக்கு எடுத்து வரப்பட்டு ஷேக்தாவூது ஆண்டவர் சமாதியில் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. ஊர்வலத்தின்போது, கனமழை பெய்தது. கொட்டும் மழையிலும்  ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் நனைந்தபடி கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.