93 தொகுதிகளில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு விறுவிறு; குஜராத்தில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்? இன்று மாலை கருத்துக்கணிப்பு முடிவு

அகமதாபாத்: குஜராத்தில் 93 தொகுதிகளில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் வாக்களித்தனர். வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கையும், இன்று மாலை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளும் வெளியாகின்றன. குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 சட்டசபை தொகுதிகளில் முதற்கட்டமாக 89 இடங்களுக்கு கடந்த 1ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. முதல்கட்ட வாக்குப்பதிவு 63.31 சதவீதமாக பதிவாகி இருந்தது. இரண்டாவது மற்றும் இறுதிகட்டமாக மீதமுள்ள 93 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வந்தது.

பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் கார்கே, ஆம்ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்தனர். நேற்று முன்தினம் மாலையுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு (டிச. 5) 93 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. மேற்படி தொகுதிகளில் 14,975 வாக்குப்பதிவு மையங்களிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட 61 கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 833 பேர் மேற்கண்ட 93 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர்.

பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் 93 தொகுதிகளிலும், காங்கிரஸ் 90, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) 2, பாரதிய பழங்குடியினர் கட்சி 12 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 44 தொகுதிகளிலும், ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சில தொகுதிகளிலும், 285 சுயேச்சைகளும் போட்டியிடுகின்றனர். இன்றைய தேர்தலில் மாநில முதல்வர் பூபேந்திர படேல், படேல் சமூக தலைவர் (தற்போது பாஜக) ஹர்திக் படேல், எதிர்க்கட்சித்தலைவர்  சுக்ராம் ரத்வா உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். சபர்மதி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று பிரதமர் மோடி வாக்களித்தார். மோடி வாக்களிக்க வந்ததால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவரது சொந்த ஊரான அகமதாபாத்தில் வாக்குப்பதிவு செய்தார்.  உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா ஆகியோரும், அவரவருக்கான வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில், ஆளும் பாஜக 51 இடங்களிலும், காங்கிரஸ் 39 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இன்றுடன் குஜராத் தேர்தல் நிறைவு பெறுவதால், அடுத்ததாக எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்பது நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இன்றைய தினம் ஐந்து மாநிலங்களில் காலியாக உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும், உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த இமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தல், இன்று முடியும் குஜராத் தேர்தல், 5 மாநிலங்களில் நடக்கும் இடைத்தேர்தல் ஆகியவற்றின் வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்படுகின்றன. குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது அன்றைய தினமே தெரிந்துவிடும். அதேநேரம் இன்று மாலை 5 மணிக்கு மேல் மேற்கண்ட மாநிலங்களில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.