“தமிழக ஆளுநர், பாஜக மாநில தலைவர் போல் செயல்படுகிறார்!" – எம்.பி ஜோதிமணி காட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கரூர் எம்.பி ஜோதிமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். காலாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்ட முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் செயல்படுவதன் விதம், நிறைவேற்றப்பட்ட பணிகள், கல்வி, சுகாதாரம், குழந்தைகள் மேம்பாடு, பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறைகள் மேற்கொண்ட வரும் நடவடிக்கைகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் எம்.பி ஜோதிமணி கேட்டறிந்தார்.

அனைத்து துறை அதிகாரிகளும் அதற்கான உரிய விளக்கங்களை அளித்தனர். அதேபோல, மாநகராட்சி நகர்புற பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் விளக்கிப் பேசினார். தொடர்ந்து, பல்வேறு திட்டங்களில் உள்ள பிரச்னைகள் குறித்தும் கேட்டு, அந்தப் பிரச்னைகளை விரைந்து முடிக்கவும் எம்.பி ஜோதிமணி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கண்காணிப்புக்குழு கூட்டம்

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஜோதிமணி, “நான் தொகுதியில் இருப்பதில்லை என்று பொய்பிரசாரம் செய்கிறார்கள். ஆனால், நான் தொடர்ந்து தொகுதி பணிகளை செஞ்சுக்கிட்டுதான் இருக்கிறேன். நான் பாதயாத்திரை போறது யாருக்கு பிரச்னையா இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். அதனால், அவர்கள் என்னைப்பற்றி இப்படிப்பட்ட விமர்சனங்களை செய்கிறார்கள். ஆனால், அவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள். என்னுடைய கரூர் நாடாளுமன்ற அலுவலகத்துக்கு தினமும் 60, 70 மனுக்கள் வருகின்றன. அவற்றுக்கு நான் இருந்தாலும், இல்லையென்றாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.கவினர் போட்ட அந்த பொய்பிரசார போஸ்டுக்குப் பிறகு, நிறைய பேருக்கு நான் பாதயாத்திரையில் நடப்பது தெரிகிறது. அவர்களில் பலபேர் எனக்கு போன் செய்து, ‘ராகுல் காந்தி ஓர் இளவரசர் மாதிரி. அவ்வளவு பெரிய குடும்பத்தில் பிறந்தவர். ஆனால், இப்படி தெருத்தெருவா கஷ்டப்படுறார். அதை பார்க்குறதுக்கே எங்களுக்கு கஷ்டமா இருக்கு. நீ ஏற்கனவே ஒல்லியாக இருக்க. இன்னும் நீ இளைச்சுப் போயிறாத. உன்னால நடக்க முடியாது. நீ வந்துரு. நாங்க மோடிக்கா ஓட்டுப் போட போறோம்’னு சொல்றாங்க. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ஒரு பெரிய ஆதரவு இருக்கு.

இது இல்லாம, இந்த நடைபயணத்தை என்னோட கரூர் நாடாளுமன்ற தொகுதி முழுக்க எடுத்துச் செல்ல, நான் எல்.இ.டி வேன் ஒன்றை அனுப்பியிருக்கிறேன். மூன்று மாதம் இருக்கும் நிலையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 97 சதவீதம் மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றி உள்ளது. மாவட்டம் நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. முழுவதும் பல்வேறு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. பணிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. பல துறைகளில் மாவட்ட நிர்வாகம் முன்னணியில் உள்ளது. மாவட்டம் நிர்வாகம் உள்ளிட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பாராட்டுகள்.

ஜோதிமணி

தமிழக ஆளுநர், பா.ஜ.க மாநில தலைவர் போல் செயல்படுகிறார். ஆளுநர் மாளிகை பா.ஜ.க கட்சி அலுவலகம் போல் செயல்படுகிறது. ஆன்லைன் சூதாட்டம் அவசர சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி அளித்தார். அதே அவசர சட்டம் மசோதா கொண்டுவரப்பட்டபோது, அதற்கு அனுமதி அளிக்க ஆளுநர் மறுக்கிறார். அவசர சட்டத்திற்கும், மசோதாவிற்கும் இடையில் என்ன நடந்தது, எதற்காக தமிழக மக்களின் நன்மைகளை புறக்கணித்து, ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் நலன்களுக்காக தமிழக ஆளுநர் வேலை செய்கிறார்? சூதாட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவாக ஆளுநரை செயல்பட சொன்னது யார்?, மத்திய அரசா, பா.ஜ.கவா, அவர் சார்ந்த அமைப்பா? என ஆளுநர் விளக்க வேண்டும். மிக நிச்சயமாக இடைப்பட்ட காலத்தில் ஆளுநர் தமிழகத்திற்கு துரோகம் செய்கிறார். அப்படிப்பட்ட ஆளுநர் தமிழகத்திற்கு தேவையில்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.