தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், தலைமை செயலாளர் இறையன்பை தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் சந்தித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் 8 ஆம் தேதி மாலை முதல் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தில் வானிலை முன்னெச்சரிக்கை குறித்து தலைமை செயலாளருடன் தென் மண்டல வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், கனமழை பெய்யக்கூடிய பகுதிகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.வரும் 8 ஆம் தேதி மாலை முதல் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
newstm.in