நாடாளுமன்றத்தில் என்ன விவாதிக்க வேண்டும்?..எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி வருகிற டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடப்பட்டது. நாடாளுமன்றத்தின் வளாகத்தில் மத்திய ராணுவ அமைச்சர் மற்றும் மக்களவையின் துணை தலைவரான ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த கூட்டம் இன்று கூடியது.

இந்த கூட்டத்தில், அரசு சார்பில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்ற இணை அமைச்சர் முரளீதரன் மற்றும் அர்ஜூன் ராம் மேக்வால், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுதீப் பந்தோபாத்யாய், தெரீக் ஓ பிரையன், தி.மு.க.வின் திருச்சி சிவா மற்றும் டி.ஆர். பாலு உள்ளிட்ட பல்வேறு முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் நாட்டில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்பின்மை விவகாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. இதுதவிர, இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் நியமனத்தில் காட்டப்பட்ட அவசரம் குறித்தும் கூட்டத்தில் காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.

பாரதிய ஜனதா அரசால், மத்திய முகமைகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என குற்றம்சாட்டிய காங்கிரஸ், எதிர்க்கட்சியினருக்கு கூடுதல் நேரம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்பட கூடாது என்றும் வலியுறுத்தியது.

இவைதவிர, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் மசோதாவை கொண்டு வரவேண்டும், போதை பொருள் விநியோகம் மற்றும் நுகர்வு அதிகரிப்பு பற்றிய விவாதம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவது உள்ளிட்ட விவகாரங்களை பற்றி கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டன. இதனை தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, விதிகள் மற்றும் அவை தலைவரின் அறிவுறுத்தலின்பேரில், அனைத்து விவகாரங்களை பற்றியும் ஆலோசனை நடத்தவும், விவாதம் மேற்கொள்ளவும் அரசு தயாராக உள்ளது என்று கூட்டத்தில் உறுதி அளித்துள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.