உச்சநீதிமன்ற உத்தரவின்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு மத்திய அரசு ரூ.50 ஆயிரம் வழங்கி வருவதாக மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, வருகிற டிசம்பர் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில், நாட்டில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்பின்மை விவகாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மேலவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வ கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து இன்று பேசினார். அப்போது, பேரிடர் மேலாண் சட்டம் 2005-ன் கீழ் தேசிய பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு மத்திய அரசு ரூ.50 ஆயிரம் வழங்கி வருகிறது என்று கூறியுள்ளார்.
மேலும் கொரோனா பாதிப்புகளால் ஏற்பட்ட உணவு பாதுகாப்பின் தாக்கம் குறையும் வகையில், கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் முதல், மத்திய அரசு, 80 கோடி பேருக்கு கூடுதலாக இலவச உணவு தானியங்களை ஒரு நபருக்கு 5 கிலோ என்ற அடிப்படையில் மாதந்தோறும் வழங்கி வருகிறது என்று மத்திய இணையமைச்சர் கூறியுள்ளார்.
newstm.in