தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பை பாராட்டும் மத்திய அரசு

தமிழகத்தில் 1,343 ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திட்டம் கடந்தாண்டு தொடங்கப்பட்டதாக கூறினார். தமிழகத்தில் விபத்து அதிகமாக நடக்கும் 500 இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களுக்கு அருகில் இருக்கும் 679 மருத்துவமனைகள் அதாவது 232 அரசு மருத்துவமனைகள், 447 தனியார் மருத்துவமனைகள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

விபத்து நேர்ந்தவுடன் உடனடியாக 48 மணிநேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு அரசு ரூ.1 லட்சம் வரை காப்பீடு திட்டத்தின் மூலம் செலவிடுகிறது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 1,31,164 பேர் பயனடைந்துள்ளனர், மேலும் ரூ.116,79,99,373 செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள மருத்துவ கட்டமைப்பை மத்திய அரசு தொடர்ச்சியாக பாராட்டிக் கொண்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 108 என்னும் அவசர வாகன உதவியை தொடங்கி வைத்ததை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

அதில் இன்று வரை 1,343 வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதில், 300 வாகனங்கள் உயிர்காக்கும் அதிநவீன கருவிகள் பொறுத்தப்பட்டு முழுமையான உயிர் காக்கும் வாகனங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.