நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.406 கோடியில் 4,644 புதிய குடியிருப்புகள் – முதல்வர் திறந்துவைத்தார்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 8 மாவட்டங்களில் ரூ.406 கோடியில் கட்டப்பட்டுள்ள 4,644 அடுக்குமாடிக் குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டம் கண்ணன்கரடு, நேதாஜி நகர், நஞ்சை ஊத்துக்குளி, இச்சிப்பாளையம், குமரன் நகர் பகுதிகளில் ரூ.101.04 கோடியில் 1,176 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

அதேபோல, கோயம்புத்தூரில் ஐயுடிபி, சூலூர் பகுதி-3, பன்னீர்மடை கிழக்கு, திருப்பூரில் புதூர், பூண்டி நகர் திட்டப் பகுதிகளில் ரூ.125.34 கோடியில் 1,500 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. மதுரையில் கருத்தபுளியம்பட்டி, கரூரில் புலியூர், சேலத்தில் புதுப்பாளையம், புதுக்கோட்டையில் போஸ் நகர், கடலூரில் பனங்காட்டு காலனி பகுதிகளில் ரூ.179.52 கோடியில், 1,968 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு 8 மாவட்டங்களில், 15 திட்டப் பகுதிகளில் மொத்தம் ரூ.405.90 கோடியில் கட்டப்பட்டுள்ள 4,644 அடுக்குமாடிக் குடியிருப்புகளை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து நேற்று காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மொத்தம் 4,500 பேருக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக, இரண்டு பேருக்கு ஒதுக்கீடு ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்தக் குடியிருப்புகள் தலா 400 சதுரஅடி பரப்பில், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, கழிப்பறையுடன் கட்டப்பட்டுள்ளன. மேலும், அனைத்துக் குடியிருப்பு வளாகங்களும் சாலை, குடிநீர், கழிவு நீரேற்றம், சிறுவர் பூங்கா, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. ‘நம் குடியிருப்பு, நம் பொறுப்பு’ திட்டத்தின் கீழ் அனைத்து திட்டப் பகுதிகளிலும் குடியிருப்போர் நலச் சங்கங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

ரூ.237.30 கோடியில் தனி வீடுகள்: தொடர்ந்து, தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 105 பகுதிகளில் வசிக்கும் 11,300 பேருக்கு தனி வீடுகள் கட்ட, தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.237.30 கோடி மதிப்பிலான பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இதையொட்டி, 2 பேருக்கு பணி ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இதுதவிர, அடுக்குமாடிக் குடியிருப்பு களுக்கான 150 கிரயப் பத்திரங்கள், மனைகளுக்கான 200 கிரயப் பத்திரங்கள் என 350 பேருக்கு கிரயப் பத்திரங்களை வழங்கும் வகையில், 4 பேருக்கு கிரயப் பத்திரங்களை முதல்வர் வழங்கினார்.

பணி நியமன ஆணை: வீட்டு வசதி துறையின் கீழ் இயங்கும் நகர ஊரமைப்பு இயக்ககத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 27 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் வகையில், இருவருக்கு நியமன ஆணைகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, குறு, சிறு நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, வீட்டு வசதி துறைச் செயலர் அபூர்வா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக இயக்குநர் ம.கோவிந்த ராவ், நகர ஊரமைப்பு இயக்குநர் பா.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.