பண மதிப்பிழப்பு – உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து!…

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி அறிவித்தார். அதன் வாயிலாக, புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதற்கு மாற்றாக புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

மேலும் புதிய 10, 20, 200 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்துக்கு வந்தன. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக விவேக் நாராயண் சர்மா உள்ளிட்ட 57 பேர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது.

மனுதாரர் சார்பில் ஆஜரான முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கான நடவடிக்கை 26 மணி நேரத்துக்குள் செய்து முடிக்கப்பட்டது என்று கூறினார். இந்த நடவடிக்கை ரிசர்வ் வங்கி சட்டத்துக்கு எதிரானது என்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த முழு விவரமும் ரிசர்வ் வங்கியின் மத்திய கழக உறுப்பினர்களுக்கோ, மத்திய அமைச்சரவைக்கோ தெரியாது என்றும் வாதிட்டார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கான சில முக்கிய ஆவணங்களை கொடுக்க மத்திய அரசு மறுக்கிறது என சிதம்பரம் கூறினார். கள்ளரூபாய் நோட்டு, பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டல், கருப்பு பணம், வரி ஏய்ப்பு ஆகியவற்றுக்கு முடிவுகட்டும் வகையில் நன்கு ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவுதான் பண மதிப்பிழப்பு என மத்திய அரசு தரப்பில் ஆஜரான ஆர்.வெங்கடரமணி வாதிட்டார். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கான பரிந்துரையை அளித்ததாகவும், இந்த நடவடிக்கைக்கான அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தா கூறினார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை பொருளாதாரம் சார்ந்த முடிவு என்பதால், கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது என நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கான முடிவு எவ்வாறு எடுக்கப்பட்டது என்பதை ஆராய முடியும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட உச்சநீதிமன்றம், இந்த ரிட் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.