
கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு பகுதியில், தொல்லியல் துறையினர் வெட்டி வைத்த கிணற்றில் இரு மாணவர்கள் பிணமாக மீட்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பூலாம்பேடு ஊராட்சி திடீர் நகரில் தொல்லியல் துறைக்காக ஒதுக்கப்பட்ட 94 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வரும் நிலையில் தொல்லியல் துறைக்கான இடத்தில் உள்ள தரை மட்ட கிணற்றில் சிறுவன் ஒருவன் சடலமாக கிடப்பதாக கவரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்ட நிலையில் தேர்வாய் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மற்றொரு மாணவனையும் தேடி வந்த கவரப்பேட்டை போலீசார் சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னர் தரை கிணற்றில் இருந்த மற்றொரு மாணவரையும் மீட்டெடுத்தனர். தொடர்ந்து தரை கிணற்றிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட இரண்டு அரசுப் பள்ளி மாணவர்களும் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதனையடுத்து நடைபெற்ற போலீசாரின் விசாரணையில் புதன்கிழமை காலை முதல் குருவராஜா கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் கோபி சந்த் (13) என்ற மாணவனும், புது ராஜா கண்டிகை அரசு தொடக்க பள்ளியில் 5 வகுப்பு படிக்கும் நகுல் (12) என்ற மாணவனும் காணாமல் போனதாகவும் இரவு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சிறுவர்கள் பிணமாக கிடந்த கிணற்றின் வழியாகச் சென்ற கிராமவாசி ஒருவர் சடலம் மிதப்பதைக் கண்டு கவரப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்ததாகவும், அதனை அடுத்து கவரப்பேட்டை போலீசார் மற்றும் தேர்வாய் தீயணைப்பு நிலைய வீரர்களும் சிறுவர்களின் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து கவரப்பேட்டை போலீசார் அடுத்த கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.