குஜராத் CM வேட்பாளருக்கு இப்படி ஒரு நிலைமை… காங்கிரஸை விழுங்கும் ஆம் ஆத்மி!

குஜராத் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்ற விஷயம் தெரியவந்துள்ளது. வரலாறு காணாத வெற்றியை பெற்று பாஜக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 92 இடங்களில் வெற்றி பெற்றாலே ஆட்சியை பிடித்து விடலாம். இந்நிலையில் பிற்பகல் 1.30 நிலவரப்படி பாஜக 153,
காங்கிரஸ்
20, ஆம் ஆத்மி 6 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

ஆம் ஆத்மி பிரச்சாரம் எடுபடவில்லை

1990ஆம் ஆண்டிற்கு பின்னர் குஜராத் தேர்தல் மும்முனை போட்டியாக அமைந்துள்ள நிலையில் ஆம் ஆத்மி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அனல் பறந்த பிரச்சாரம், டெல்லி மாடல், இலவச தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் எடுபடவில்லை என்று தெரிகிறது. பாஜகவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர இன்னும் பல ஆண்டுகள் எனச் சொல்லப்படுகிறது. அதேசமயம் காங்கிரஸின் வாக்கு வங்கியை உடைத்து கதறவிட்டுள்ளது ஆம் ஆத்மி.

முதல்வர் வேட்பாளர் பின்னடைவு

குறிப்பாக கம்பாலியா சட்டமன்ற தொகுதியை எடுத்துக் கொள்வோம். இங்கு தான் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் இசுதான் கத்வி போட்டியிட்டார். இவர் காலை முதலே முன்னிலையில் இருந்து வந்தார். பாஜகவில் அயர் முலுபாய் ஹர்தாஸ்பாய் பேரா 2வது இடத்தில் இருந்தார். காங்கிரஸ் 3வது இடத்தில் இருந்தது. இந்நிலையில் பிற்பகல் 1.30 நிலவரப்படி ஆம் ஆத்மி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது.

காங்கிரஸின் வாக்கு வங்கி

பாஜக 65,117 வாக்குகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து ஆம் ஆத்மி 47,128 வாக்குகளும், காங்கிரஸ் 38,215 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. இந்த இடத்தில் ஆம் ஆத்மி பெற்ற வாக்குகள் காங்கிரஸின் வாக்கு வங்கி. ஆம் ஆத்மி மட்டும் களத்தில் இல்லாமல் இருந்திருந்தால் 70 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று காங்கிரஸ் முதலிடத்திற்கு முன்னேறியிருக்கும்.

தடம் பதித்த ஆம் ஆத்மி

வெற்றி பெறுவதற்கும் பிரகாசமான வாய்ப்புகள் உருவாகியிருக்கும். ஆனால் ஆம் ஆத்மி வருகை காங்கிரஸை புரட்டி போட்டு விட்டது. இந்த தேர்தலில் பாஜக 53.33 சதவீத வாக்குகளை பெற்ற நிலையில், காங்கிரஸ் 26.9 சதவீதமும், ஆம் ஆத்மி 12 சதவீதமும் பெற்றுள்ளன. காங்கிரஸின் ஒரு பகுதி வாக்கு வங்கியை அப்படியே ஆம் ஆத்மி விழுங்கி விட்டது என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

3ஆம் இடம் பிடித்தது

ஒட்டுமொத்தமாக பார்க்கையில் ஆம் ஆத்மி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, பிற்பகல் 1.30 நிலவரப்படி பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. 150 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 2 இடங்களில் வென்றுள்ளது. 14 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி 5 இடங்களில் மட்டும் முன்னிலையில் இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.