கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பாதித்த தொழில்களில் ஆம்னி பேருந்து தொழிலும் முக்கியமான ஒன்று. ஊரடங்கு காரணமாக மக்கள் தங்கள் வீட்டில் இருந்தே வெளிவராத காலகட்டத்தில் பல ஆம்னி பேருந்துகள் ஓடாமல் நிறுத்தி (ஸ்டாப்பேஜ்) வைக்கப்பட்டன.

தற்போது ஸ்டாப்பேஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை எடுக்கமுடியாமல் ஆம்னி பேருந்துகளின் முதலாளிகள் திணறி வருகின்றன. இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து முதலாளிகள் சங்கம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“கொரோனா முதலாம் அலை ஊரடங்கு முடிந்தபின்னர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்துத்துறை ஆணையர் ஸ்டாப்பேஜ் விண்ணப்பத்தை அனுமதித்து குறிப்பிட்ட காலத்திற்கு இந்த பேருந்துகள் இயங்கவில்லை என்ற சான்றிதழை (nil assessment) செய்து கொடுத்து பேருந்துகளை இயக்க அனுமதித்தார்கள்.
அதுபோல கொரோனா இரண்டாவது அலையின்போது ஸ்டாப்பேஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 1300 பேருந்துகளில் 850 பேருந்துகள் படிப்படியாக இயக்கப்பட்டன. மீதமுள்ள 350 பேருந்துகள் ஸ்டாப்பேஜிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த பேருந்துகளை தற்போது இயக்க போக்குவரத்துத்துறை ஆணையரிடம் அனுமதி கேட்டபோது அரசிடம் கேட்டு அனுமதிக்கிறோம் என்று கூறி ஒருவருட காலமாக பேருந்துகளை இயக்க அனுமதிக்காமல் காலதாமதம் செய்து வருகிறார்கள்.

இந்த பேருந்துகளை இயக்க அனுமதித்தால் காலாண்டிற்கு சுமார் 4 கோடி ரூபாய் வீதம் வருடத்திற்கு 16 கோடி ரூபாய் அளவிற்கு சாலை வரி மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும். தற்போது இந்த பேருந்துகளை இயக்க அனுமதிக்காததால் அரசுக்கு 19 கோடி ரூபாயும் பேருந்து உரிமையாளர்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா, கேரளா மற்றும் பாண்டிச்சேரி போன்ற அண்டை மாநிலங்களில் இன்று வரை ஸ்டாப்பேஜ் விண்ணப்பத்தை அனுமதித்து பேருந்துகள் இயக்கப்படவில்லை என்கிற சான்றிதழ்கள் கொடுக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் ஒரு வருட காலமாக முடிவு எடுக்காமல் கால தாமதம் செய்து வருகிறார்கள்.

கடந்த ஒரு வருட காலமாக இந்த பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பேருந்துகள் மோசமாக பழுதடைந்தும், வங்கி கடன் செலுத்தமுடியாத நிலைக்கும் நாங்கள் தள்ளப்பட்டுளோம். ஒரு வருடமாக இயங்காத பேருந்துகளுக்கு தற்பொழுது சாலைவரி செலுத்தி இயக்கும் அளவுக்கு உரிமையாளர்களுக்கு பொருளாதார நிலை இல்லை.
கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் 01.10.2021 முதல் ஆம்னி பேருந்துகளை எடுத்து இயக்க பலமுறை கோரிக்கை வைத்தும் போக்குவரத்துத்துறை அமைச்சர் 16.03.2021 அன்று பரிந்துரைத்து இன்று வரை அனுமதி கிடைக்கவில்லை.

அதனால் கடந்த ஒரு வருட காலமாக இயங்காத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி கட்ட நிர்பந்திக்காமல் அவைகளை இயக்க அனுமதிக்க வேண்டும் அல்லது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்ற 350 பேருந்துகளை அரசே எடுத்துக்கொண்டு, பேருந்துகளின் மீதுள்ள வங்கி கடன்களை ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து முதலாளிகள் சங்க தலைவர் டாக்டர் அன்பழகனிடம் பேசினோம். அவர் கூறியதாவது, “கொரோனா ஊரடங்கால் பேருந்துகள் அதிக காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த பேருந்துகளுக்கு பழுது பார்த்து இயக்க வேண்டும் என்ற காரணத்தால், ஆம்னி பேருந்துக்கள் முதலாளிகள் தங்களிடம் உள்ள பேருந்துகளில் பாதி எண்ணிக்கை பேருந்துகளை மட்டுமே முதலில் இயக்கினர்.

2021-ம் ஆண்டு தீபாவளியின் போது ஸ்டாப்பேஜில் இருக்கும் 350 பேருந்துகளை இயக்க அனுமதி கேட்டபோது, அதிகாரிகள் எந்த காரணமும் கூறாமல் அனுமதி தர மறுத்துவிட்டனர். அதன்பின்னர் 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஸ்டாப்பேஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளை இயக்க அனுமதிக்க முடியாது என்று கூறினார்கள். அதிகாரிகள் அப்போது கூறியிருந்தால்கூட நாங்கள் சாலை வரி கட்டி பேருந்துகளை இயக்கியிருப்போம்.
இதற்கிடையில் stoppage-ல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளுக்கு வரி செலுத்தாமல் போனதால் ரூ.1,08,000 பெனால்டி ஆகிவிட்டது. இது அரசுடைய தவறுதான். அவர்கள் குறிப்பிட காலத்திற்குமேல் stoppage அனுமதிக்கமாட்டோம் என்று முன்னரே கூறியிருந்தால், நாங்கள் அந்த பேருந்துகளை இயக்க தொடங்கியிருப்போம்.

இதுகுறித்து நாங்கள் போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் பேசியபோது, அவரும் எங்களுக்காக ஹோம் டிபார்ட்மெண்ட்டிடம் பலமுறை பேசினார். அதற்கு எந்த பலனும் கிடையாது. இந்த விஷயத்தில் நிதித்துறை தான் தாமதிப்பதாக கூறப்படுகிறது. பேருந்துகளை சாலைவரி செலுத்தாமல் இயக்க அரசு விரைவில் அனுமதிக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை” என்று பேசினார்.