இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் அறிவுரை!

அரசின் சுற்றுச்சூழல் திட்டங்களை முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்துமாறு பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வேண்டுகோள் விடுத்தார்.


உத்தரகாண்டின் டேராடூன் மாவட்டம் முசோரியில் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய ஐ.ஏ.எஸ். பயிற்சி அகாடமியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார். அப்போது அவர் இளம் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

இளம் அதிகாரிகள் காணும் கனவு இந்தியாவை நனவாக்கும் நிலையில் இருக்கிறீர்கள் என்று ஊக்கப்படுத்தினார். சிவில் சர்வீசஸ் என்பது நாட்டுக்கு சேவை செய்யும் ஒரு பாதை என்று கூறிய அவர், இது ஒரு கொள்கை அடிப்படையிலான வாழ்க்கை என்று கூறினார்.

 

சிறந்த குணநலன்கள்தான் உயர்ந்த நற்பண்பு என்று கூறும் அகாடமியின் பொன்மொழியை எப்போதும் உங்களுடன் எடுத்துச்செல்ல வேண்டும் என்று இளம் அதிகாரிகளுக்கு திரவுபதி அறிவுறுத்தினார். நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் அரசியலமைப்பு பொறுப்பு மற்றும் தார்மீக கடமை என்று கூறினார்.

அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் கொள்கைகளை உருவாக்கும் செயல்பாட்டில் நீங்கள் முக்கிய பங்கு வகிக்கப்போகிறீர்கள் என்று அவர்களை உற்சாகப்படுத்தினார். ஏழைகள், தாழ்த்தப்பட்ட பிரிவினரின் தேவைகளை உணர்ந்து, அனைத்து பிரிவினரும் இணைந்து செயல்பட்டால்தான் உண்மையான வளர்ச்சி ஏற்படும் என்று கூறினார்.

புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை முழு உலகமும் சந்தித்து வரும் ஒரு பிரச்சினையாக இருக்கின்றன என்று திரவுபதி தெரிவித்துள்ளாரா். இத்தகைய சவாலை சமாளிக்க பயனுள்ள நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். எனவே, அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்களை முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

 

சிவில் சர்வீசஸ் பணியாளராக உங்கள் பணிக்காலத்தில் செய்ய விரும்புவதை பட்டியலிடுங்கள் என்று குடியரசு தலைவர் கூறினார். அதை 25 ஆண்டுகளுக்கு பிறகு உங்களால் திறக்கப்படும் வகையில் பெட்டி ஒன்றில் வைத்திருங்கள் என்று தெரிவித்தார். 2047-ல் அதை திறக்கும் போது, உங்கள் இலக்குகளை அடைந்துவிட்ட திருப்தி ஏற்படும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும் என்று திரவுபதி முர்மு அறிவுறுத்தியுள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.