பாஜகவை புகழ்ந்த மல்லிகார்ஜூன் கார்கே; கர்நாடகவில் சலசலப்பு.!

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளன. இங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே இருமுனைப் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி தான் தற்போது பாஜக ஆட்சி அமைத்து செயல்பட்டு வருவது குறிப்பிடதக்கது. கர்நாடகத்தில் பாஜக தேர்தலில் வெற்றி பெற்று ஒரு முறைகூட ஆட்சி அமைக்காத நிலையில், நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தேர்தலுக்கான பணிகளை இருகட்சிகளும் முடுக்கிவிட்டுள்ளது. அந்தவகையில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தேர்வு செய்யப்பட்டார். இந்தநிலையில் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின் முதல் முறையாக சொந்த மாநிலத்திற்கு மல்லிகார்ஜுன் கார்கே இன்று வருகை தந்தார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், முன்னாள் முதல்வரும் சட்டமன்றக் குழு தலைவருமான சித்தராமையா ஆகியோர் தலைமையில் கல்புர்கியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் அவர் பேசும்போது, ‘‘ நீங்கள் நமது அரசாங்கத்தை கொண்டு வர தீவிரமாக செயல்பட வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் நாம் இருந்தால் மட்டுமே, கன்னட மக்களுக்கு உண்மையான வளர்ச்சி பணிகளில் நாம் ஈடுபட முடியும். நீங்கள் நமது கட்சிக்கு வலிமையை சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

பாஜகவும் கர்நாடகாவில் ஆட்சி அமைக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எனவே மாநிலம் முழுவதும் உள்ள கிராமங்கள், நகரங்களுக்கு நீங்கள் சென்று மக்களை ஈர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் மோடி, அமித்ஷா மற்றும் ஒன்றிய அமைச்சர்களை போல் நீங்கள் தீவிரமாக செயல்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

அவ்வாறு செய்ய தவறினால் கன்னட மக்களுக்கு நாம் துரோகம் இழைத்தது போல் ஆகிவிடும். முதல்வர் மற்றும் அமைச்சர் பதவிகளுக்காக நாம் நமக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டால், நிச்சயம் நமக்கு தோல்வி தான் கிடைக்கும். ஹிமாச்சல் பிரதேசத்தை போல் கர்நாடகாவிலும் நமது வெற்றி நிச்சயம். அதற்கு நாம் இணைந்து பணியாற்ற வேண்டும்.

நான் எப்போதும் எந்த பதவியையும் கேட்டதில்லை. இப்போது எனக்கு உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளது. உங்களுடைய ஆதரவும், தலைமையின் நம்பிக்கையும் தான் அதற்கு காரணம். அதேபோல் தான் கட்சி வளர்ச்சி பணிகளில் தீவிரமாக ஈடுபடுங்கள், பதவிகள் உங்களைத் தேடி வரும்’’ என அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.