5 கிராமத்தை சூழ்ந்த கடல் நீர்; 2 நாட்களாக முடங்கிய மக்கள்!

தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல் தாக்கம் காரணத்தினால் வங்க கடலில் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. இதன் காரணமாக பழவேற்காடு கடல் சீற்றத்தால் கொந்தளித்தது.

மிகவும் தாழ்வாக காணப்படும் கோரைக்குப்பம் கடற்கரை பகுதி பழவேற்காடு ஏரிக்கு அருகினில் தான் உள்ளது. இந்த கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமாராக 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடல் கொந்தளிப்பால் கடல் நீர் கோரைக்குப்பம் பகுதி வழியாக புகுந்து, பழவேற்காடு ஏரியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இக்கிராமத்தின் வழியாகவே லைட்ஹவுஸ்குப்பம்-காட்டுப்பள்ளி நெடுஞ்சாலை செல்கிறது.

தற்போது இந்த சாலையின் மீது 2 அடி உயரத்திற்கு கடல் நீர் செல்கிறது. மேலும் தெற்கு புறமாகவும் கடலில் நீர் புகுந்து உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

புயல் பாதிப்பினால் காற்று தொடர்ந்து வீசியதனால் சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொன்னேரி, சப் கலெக்டர் ஐஸ்வர்யாராமநாதன், தாசில்தார் செல்வக்குமார் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள், ஊராட்சி மன்றத்தலைவர் பேரிடர் மேலாண்மை பாதுகாப்பு குழுவினர் கோரைக்குப்பம் மீனவ கிராமத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

இதன் பிறகு அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால், அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற மறுத்து விட்டதால் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் லைட்அவுஸ்குப்பம் ஊராட்சியில் அடங்கிய பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தனர்.

மேலும் பொதுமக்களை அருகில் உள்ள வைரவன்குப்பத்தில் அமைந்து இருக்கும் புயல் பாதுகாப்பு மையத்திற்கு செல்ல கலெக்டர் உள்பட அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

அப்போது ஊராட்சி மன்றத் தலைவர் கஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் செல்வழகிஎர்ணாவூரான் ஆகியோர் அதிகாரிகளிடம் பாதிப்புகள் குறித்தும், பாதுகாப்பு மையங்களுக்கு செல்ல நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினர்.

இதன் பின்னர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான்வர்கீஸ் வைரவன்குப்பம் கிராமத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் கிராம மக்கள் தங்குவதற்கு போதுமான அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்தார்.

இதன் பிறகு, கடப்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய ஆண்டார்மடம் கிராமத்தில் உள்ள பன்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்திற்கு நேரில் வந்து, கலெக்டர் ஆய்வு செய்தார்.

இதேபோல் பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரியின் மையப்பகுதியில் பழவேற்காடு ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் அடங்கிய எடமணிகுப்பம், எடமணி ஆதிதிராவிடர் காலனி, பசியாவரம் ரஹமத்நகர், சாத்தாங்குப்பம் ஆகிய 5 மீனவ கிராமங்கள் உள்ளன.

இந்நிலையில் மாண்டஸ் புயலால் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் வங்கக் கடலில் சீற்றம் ஏற்பட்ட நிலையில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் 10 அடி உயரத்திற்கு எழும்பின.

இந்த கடல்நீர் கடற்கரையை கடந்து பழவேற்காடு ஏரியில் நுழைந்ததால் ஏரி முழுவதும் நிரம்பி உள்ளது. இதனால் இப்பகுதியில் 5 மீனவ கிராமங்களை சுற்றிலும் கடல்நீர் சூழ்ந்துள்ளது.

இதன் காரணமாக, கிராம மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற முடியாமல் வீட்டில் கடந்த 2 நாட்களாக முடங்கி உள்ளனர். இவர்கள் தங்களுக்கு தேவையான குடிநீருக்காகவும், உணவுக்காகவும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.