சென்னை: “மாண்டஸ் புயல் கரையைக் கடந்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும்” என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார் .
சென்னையில் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் வெள்ளிக்கிழமை (டிச.9) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மாண்டஸ் தீவிர புயல் வெள்ளிக்கிழமை காலை வலுவிழந்து புயலாக மாறியது. சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 180 கி.மீ தொலைவில் தற்போது நிலை கொண்டுள்ளது. இதுதொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) இரவு, சனிக்கிழமை அதிகாலைக்குட்பட்ட நேரத்தில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்கக்கூடும்.
இதன் காரணமாக அடுத்துவரும் இரண்டு தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொருத்தவரைக்கும் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கான வாய்ப்பு உள்ளது.
சனிக்கிழமை (டிச.10), திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு மற்றும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வடதமிழக கடலோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மதியம் முதல் மாலை வரையில் பலத்த காற்றானது மணிக்கு 50 முதல் 60 கி.மீட்டர் வேகத்திலும், சமயங்களில் 70 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை அதிகாலை வரையில் மணிக்கு 65 முதல் 75 கி.மீட்டர் வேகத்திலும், சமயங்களில் 85 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
சனிக்கிழமை அதிகாலை முதல் காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து மணிக்கு 50 முதல் 60 கி.மீட்டராக வீசக்கூடும். சனிக்கிழமை மாலை மணிக்கு 30 முதல் 40 கி.மீட்டர் வேகத்திலும், சமயங்களில் 50 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளைப் பொருத்தவரை, வெள்ளிக்கிழமை மாலை முதல் பலத்த காற்றானது மணிக்கு 50 முதல் 60 கி.மீட்டர் வேகத்திலும், சமயங்களில் 70 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மீனவர்கள் 10-ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மாண்டஸ் புயல் கரையைக் கடந்த பிறகு, ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, 3 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும். இதன் காரணமாக வடதமிழகத்தின் உள்பகுதிகள், ராயலசீமா மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு கர்நாடகப் பகுதிகளில் 10-ம் தேதி வரை, ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்” என்று அவர் கூறினார்.