சாதி,மதம் பற்றி பேசக்கூடாது…சபாநாயகர் எச்சரிக்கை!

மக்களவையில் எம்.பி.க்கள் யாரும் சாதி, மதத்தைக்கூறி பேசக்கூடாது என சபாநாயகர் ஓம் பிர்லா கடுமையாக எச்சரித்தார்.


நாடாளுமன்ற மக்களவையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவது பற்றி, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., ஏ.ஆர்.ரெட்டி கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, ரூபாய் மதிப்பு சரிந்து வருவதை குறிப்பிடுகையில் ரூபாய் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று கூறியதை அவர் குறிப்பிட்டார். இதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர் கேள்வியை மட்டும் கேட்க வேண்டும் என்று கண்டித்தார். அதற்கு அவர் சபாநாயகரை நோக்கி, நீங்கள் இதில் குறுக்கிடமுடியாது என்று கூறினார். ஆனால் சபாநாயகர் ஓம்பிர்லா, சபாநாயகரிடம் இப்படிப் பேசக்கூடாது என்று கண்டித்தார்.

 

அத்துடன் சபையில் இருந்த மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை நோக்கி சபாநாயகர் ஓம் பிர்லா, சபாநாயகருக்கு எதிராக இப்படியெல்லாம் பேசக்கூடாது என்பதை உங்கள் கட்சி எம்.பி.க்கள் புரிந்துகொள்ளுமாறு சொல்லுங்கள் என அறிவுறுத்தினார். இருப்பினும் அந்த எம்.பி. கேள்வி கேட்க அனுமதித்தார்.

அவரது கேள்விக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது அவர் காங்கிரஸ் எம்.பி. பலவீனமான இந்தியில் கேட்ட கேள்விக்கு நானும் அப்படிப்பட்ட பலவீனமான இந்தியில் பதில் தருகிறேன் என்றார். அப்போது நாட்டின் பொருளாதாரம் நிச்சயமாக தீவிர சிகிச்சைப்பிரிவில்தான் இருந்தது என்றார்.

 

5 சதவீத பொருளாதார வளர்ச்சிதான் இருந்தது. இன்றைக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியிலும், உக்ரைன்-ரஷியா போருக்கு இடையேயும் இந்திய பொருளாதாரம் வேகமான வளர்ச்சி காணும் பொருளாதாரமாக உள்ளது. இது பெருமைக்குரிய விஷயம் என்று கூறினார்.

ஆனால் இதை அவர்கள் வேடிக்கையாக்குகிறார்கள் என்று குற்றம்சாட்டிய அவர், நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும்போது அவர்கள் பொறாமையால்தான் அப்படிப்பட்ட விஷயங்களைப் பேசுகிறார்கள் என்று அவர் கூறினார்.

இந்த நிலையில், தான் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால்தான் தனது இந்தி மொழி புலமை பற்றி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில வார்த்தைகளை குறிப்பிட்டார் என ஏ.ஆர்.ரெட்டி குற்றம்சாட்டினார். அத்துடன் அவர் தனது சமூகப்பிரிவையும் குறிப்பிட்டார்.

 

மக்களவையில் சாதிப்பெயரைக் குறிப்பிட்டதால் அதிர்ந்து போன சபாநாயகர் ஓம்பிர்லா, மக்களவை உறுப்பினர்களை, மக்கள் சாதியின் அடிப்படையிலோ, மதத்தின் அடிப்படையிலோ தேர்ந்தெடுக்கவில்லை என்று கூறினார். யாரும் சபையில் இத்தகைய வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்றார். அதை மீறி பேசினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என ஓம் பிர்லா கடுமையாக எச்சரித்தார். இதனால் நாடாளுமன்ற அவையில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.