பாலக்காடு: கேரளாவின் பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி வனப்பகுதியில் உள்ள மலை கிராமம் ஒன்றில் பழங்குடியின கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆற்றில் பாலம் இல்லாததால் அந்த கிராமத்துக்கு போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் அப்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மூங்கிலில் தொட்டில் கட்டி சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு உள்ளூர்வாசிகள் தூக்கி வந்தனர்.
பிறகு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அப்பெண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் அப்பெண்ணை தொட்டிலில் தூக்கிச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது.
அப்பெண்ணை சுமந்து வந்தவர்களில் ஒருவர் கூறும்போது, “சனிக்கிழமை இரவு 11 மணிக்கு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பலரை உதவிக்கு அழைத்தோம். இறுதியாக தொட்டில் கட்டி பெண்ணை தூக்கி வந்தோம். கனமழையும் எங்களுக்கு சோதனையை ஏற்படுத்தியது. என்றாலும் 2 உயிர்களை காப்பாற்றுவதே நோக்கமாக இருந்தது” என்றார்.
கிராம பஞ்சாயத்து தலைவர் ஜோதி அனில் குமார் கூறும்போது, “அப்பெண் குறும்பர் பழங்குடியினத்தை சேர்ந்தவர். வழக்கமாக இவர்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியே வர மறுப்பார்கள். மருத்துவக் குழுவினர் அடிக்கடி அந்த கிராமத்துக்கு சென்று வருவது வழக்கம். பவானிபுழா ஆற்றில் பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது” என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறும்போது, “இந்த சம்பவம் அரசுக்கு அவ மானத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் மக்களின் துணிவே 2 உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. இப்போதாவது சாலை, மின்சாரம் மற்றும் பயண வசதியை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.