மதுரை: பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களை கொள்முதல் செய்வது என்பது அரசின் கொள்கை முடிவு என ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்த சுந்தரவிமலநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கு உரிய பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, ‘‘இது அரசின் கொள்கை முடிவோடு தொடர்புடையது. பரிசுத் தொகுப்பு தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே, இந்த மனுவை ஏற்கக் கூடாது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், தமிழக கூட்டுறவு மற்றும் வேளாண்மைத் துறை முதன்மை செயலர்கள் தரப்பில் எழுத்துப் பூர்வமாக பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
