திருப்பதியில் பேருந்தில் லட்டில் மயக்க மருந்து கொடுத்து பக்தர் ஒருவரிடம் இளம்பெண் 6 லட்சம் மதிப்பிலான தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளார்.
ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு ஸ்ரீகாளகஸ்தி கோவிலிற்கு பேருந்தில் சென்றுள்ளார். அப்பொழுது பேருந்தில் பயணம் செய்த இளம்பெண் ஒருவர் அந்த நபருக்கு அறிமுகமாகியுள்ளார். பின்னர் ஸ்ரீகாளகஸ்தியில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்ற இளம் பெண் ஏழுமலையான் கோவில் பிரசாதத்தை வழங்கி உள்ளார்.
பிரசாதம் சாப்பிட்ட சில நிமிடங்களில் அந்த நபருக்கு போதை மயக்கம் ஏற்பட்டுள்ளது. மயக்கத்தில் இருந்த அந்த நபரிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிக் கொண்டு அந்த இளம்பெண் காணாமல் சென்றார்.
போதை மயக்கம் தெளிந்த பிறகே தான் ஏமாந்ததை அவர் அறிந்துள்ளார். இதனை தொடர்ந்து நகை மற்றும் பணம் திருடு போனது குறித்து ஸ்ரீகாளஹஸ்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஸ்ரீ காளஹஸ்தி காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தங்கும் விடுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் ஆதாரத்தை கொண்டு இளம்பெண்ணை தேடி வருவதாக காவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. திருப்பதி லட்டில் மயக்க மருந்து கொடுத்து பணம் மற்றும் நகைகளை இளம்பெண் கொள்ளையடித்து சென்றது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in