
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூர் அதிரடி சோதனை நடத்துமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது பழைய பேட்டை பேருந்து நிலையம் அருகே கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் பெயர் அசோக் என்பதும், கிருஷ்ணகிரி பழையபேட்டை கொத்தப்பேட்டா காலனியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

அந்த இளைஞர் மீது ஏற்கனவே 3 அடிதடி வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. மேற்கொண்டு அவரது செல்போனை ஆய்வு செய்த போலீசார், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்திருந்த ரீல்சை ஆய்வு செய்தனர்.
அப்போது அதில் கஞ்சா அடிப்பது, கஞ்சா செடியின் அருகில் இருந்து ரீல்ஸ் செய்வது, காவல்துறையினருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ரீல்ஸ் செய்திருப்பதும் தெரியவந்தது.

அதன் அடிப்படையில் அசோக் மீது வழக்கு பதிவு செய்த நகர போலீசார், அவரிடம் வீடியோ மூலம் வாக்குமூலம் பெற்றனர். அந்த வாக்கு மூலத்தில் இனி நான் கஞ்சா அடிக்க மாட்டேன் என்றும் அடிதடியில் ஈடுபட மாட்டேன், போலீசாரை தரக்குறைவாக பேசமாட்டேன், ஒழுக்கத்துடன் நடந்து கொள்வேன் எனவும் போலீசாரிடம் உறுதியளித்துள்ளார்.
newstm.in