தமிழக அமைச்சரவையில் அண்மையில் மாற்றம் செய்யப்பட்டு சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வான உதயநிதி ஸ்டாலின், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இதற்காக, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதன் வசமிருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, உதயநிதி ஸ்டாலினுக்காக ஒதுக்கிக்தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பேசி வருகின்றனர். இந்தநிலையில் தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளரான மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, விருதுநகர் சட்டமன்ற தொகுதி தி.மு.க.சார்பில் மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சி.வி.மெய்யநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொள்ள இருந்தனர். இதற்காக, விருதுநகர் தி.மு.க.சார்பில் திரும்பும் திசையெங்கும் ஃப்ளக்ஸ் பேனர்களும், தி.மு.க.கொடியும் கட்டப்பட்டிருந்தன. கடைசி நேரத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனால் பொதுக்கூட்டத்திற்கு வரமுடியாமல் போகவே, அமைச்சர்கள் சி.வி.மெய்யநாதன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் மட்டும் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசினர்.

அப்போது, கூட்டத்தில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதன் பேசுகையில், “பேராசிரியர் அன்பழகன் எளிய வாழ்க்கைக்கு சொந்தக்காரர். தனக்கென 5 கொள்கைகளை வகுத்து வாழ்ந்தவர். நான் முதலில் மனிதன், அதன்பிறகே அன்பழகன், சுயமரியாதைக்காரன், பெரியார் மற்றும் அண்ணாவின் தம்பி, கலைஞரின் உற்ற தோழன் என 5 கொள்கையின்படி வாழ்ந்தவர்.
கழகத்தின் பொதுச் செயலாளர், தமிழகத்தின் நிதி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர். நிதித்துறையைக்காட்டிலும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவர் ஆற்றிய பணிகளால்தான் தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று சீரிய நிலையில் இருக்கிறது. இந்தியாவில் தமிழகம் 89 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாகவும், 51.7சதவீதம் உயர்கல்வி பெற்ற மாநிலமாக திகழ்கிறதென்றால் அதற்கு பேராசிரியர் அன்பழகன் அமைச்சராக இருந்தபோது செய்த பணிகளே காரணம்.

பெரியாரின் தொண்டனாக, பேரறிஞர் அண்ணாவின் படைத்தளபதியாக, கலைஞர் கருணாநிதியின் தோழனாக அவருடன் 40 ஆண்டுகள் இணைந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக பணிசெய்துள்ளார். கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் இணைந்திருந்த வரலாறு போல இந்தியாவில் வேறெங்கும் கிடையாது. `பொதுவுடைமைக்காக போராடிய கார்ல் மார்க்ஸூக்கு துணையாக நின்றவர் ஏங்கல்ஸ். அதுபோலத்தான், சமுக நீதிக்காக போராடிய கருணாநிதிக்கு துணையாக நின்றவர் பேராசிரியர் அன்பழகன்’ என முதல்வர் மு.க.ஸ்டாலினே பேராசிரியர் அன்பழகனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்” என நெகிழ்ந்து பேசினார். மேலும் உதயநிதி அமைச்சரனாது குறித்து, “நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தவர் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி தான். இன்று அவர் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதற்கு நானும் ஒரு சிறு காரணமாக அமைந்துள்ளேன். அவர் கருணாநிதியின் மறு உருவமாக இளைஞர்களை வழி நடத்துபவராக இருக்கிறார்” என்றவர், முதல்வர் ஸ்டாலின் சாதனைகள்யும், அமைச்சர் தங்கம் தென்னரசுவையும் பாராட்டியும் பேசினார்.
அமைச்சர் சி.வி.மெய்யநாதன் உரை குறித்து பேசிய எதிர்க்கட்சினர் சிலர், “மொத்தமாக, சுமார் 25 நிமிடம் உரையாற்றிய அமைச்சர் சி.வி.மெய்யநாதன், பேராசிரியர் அன்பழகன் குறித்து அதிகபட்சம் 10 நிமிடமே பேசியிருப்பார். மீதியுள்ள நேரம் மொத்ததிற்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் புதிதாக அமைச்சர் பொறுப்பேற்றுள்ள உதயநிதி இவர்களின் புகழைத்தான் பேசியிருக்கிறார்.

வரவேற்பு பேனர்கள் முதல் பொதுக்கூட்டத்துக்காக அச்சடிக்கப்பட்ட நோட்டீஸ் வரை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதன் என்றே அச்சிட்டுள்ளனர். அந்த அளவிற்கு அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். உண்மையில் யார்தான் விளையாட்டுத்துறை அமைச்சர்? என்ற சந்தேகம் வந்துவிட்டது” என விமர்சித்து சென்றனர்.