சென்னை: தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிந்து முறியடிக்கும் வகையில் அனைத்து மாவட்ட எஸ்பி., மண்டல ஐஜி.க் களுக்கு ‘சிறப்பு புலனாய்வு’ பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக். 23-ம் தேதி காரில் சிலிண்டர் வெடித்தது. இதில், ஜமேஷா முபின்(28) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். தற்கொலைப்படை தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதற்கு முன்னரும் தமிழகத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. அந்த வகையில், 1998-ல் கோவையில் 11 இடங்களில் 13 குண்டுகள் என தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. 2011-ல் பாஜக மூத்த தலைவர்களில ஒருவரான அத்வானி, ரத யாத்திரை மேற்கொள்ள மதுரைக்கு வந்து அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்பட்டபோது அவரது யாத்திரை செல்லும் வழியான திருமங்கலம் ஆலம்பட்டி அருகே பாலத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. 2014-ல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது.
இப்படி தமிழகத்தில் பல வெடிகுண்டு பயங்கரவாத செயல்கள் நிகழ்த்தப்பட்டன. இதேபோல், அண்மையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டபோது பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. இந்த சம்பவங்கள் தமிழக காவல் துறைக்கும், காவல் துறையின் புலனாய்வு பிரிவுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
எனவே, இனி இதுபோல் மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக காவல்துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்ஒரு பகுதியாக, பயங்கரவாத செயல்கள் மற்றும் குற்றச் செயல்கள் நிகழ்வதற்கு முன்னரே அதை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில் அனைத்து காவல் மாவட்ட எஸ்பிக்கள், மண்டல ஐ.ஜிக்களுக்கு சிறப்பு புலனாய்வு பயிற்சி, டிஜிபி அலுவலகத்தில்அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து டிஜிபி அலுவலக உயர் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு வகையான சூழல் நிலவுகிறது. மேலும், மாவட்டம்தோறும் பலதரப்பட்ட தேவை மற்றும் பிரச்சினை உள்ளது. அதை சார்ந்தே குற்றங்களும் நிகழ்கின்றன. சூழலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல அதிகாரிகள் இதை புரிந்து கொண்டு தங்களை விரைவாக தயார்படுத்திக் கொள்கின்றனர். ஆனால், சிலரது செயல்பாடுகளில் திருப்தி இல்லை.
எனவே, மாவட்ட சூழலை அறிந்துஅதற்கு ஏற்றவாறு விரைந்து செயல்பட ஏதுவாக அனைத்து மாவட்ட எஸ்பி.க்களுக்கும் ‘சிறப்பு புலனாய்வு’ பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பலகுற்ற வழக்குகளை திறம்பட துப்பு துலக்கிய போலீஸ் அதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் இந்த பயிற்சியை அளிக்க உள்ளனர். மண்டல ஐஜிக்களுக்கும் இந்தபயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கோவையில் 1998-ல் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 200 பக்கத்தில் புத்தகம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்துக்கென பணியமர்த்தப்படும் போலீஸ்அதிகாரிகள் அந்த புத்தகத்தை முழுமையாக படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் எந்தெந்த மாவட்டங்களுக்கு போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்களோ அந்த மாவட்டம் பற்றிய முழுமையான தெரிதல் வேண்டும். இதை மையமாக வைத்தும், புலனாய்வு, குற்ற தடுப்பு முன்னெச்சரிக்கை ஆகியவற்றை அடிப்படையாக வைத்தும் சிறப்பு புலனாய்வு பயிற்சி விரைவில் அளிக்கப்பட உள்ளது’’ என்றனர்.
அதிகாரிகளுக்கு மதிப்பெண்: மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்கள், மண்டல ஐஜிக்களின் செயல்பாடு குறித்து தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு போலீஸார் தகவல் சேகரித்து வருகின்றனர். செயல்பாடுகளின் அடிப்படையில் மதிப்பெண்களும் வழங்கப்படுகின்றன. அதிக மதிப்பெண் பெறும் அதிகாரிகளை சவாலான இடங்களில் பணியமர்த்தவும், குறைவான மதிப்பெண் பெறுபவர்களை முக்கியத்துவம் இல்லாத இடத்தில்பணியமர்த்தவும் உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல குற்ற வழக்குகளை திறம்பட துப்பு துலக்கிய போலீஸ் அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் இந்த பயிற்சியை அளிக்க உள்ளனர்.