சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சமத்துவபுரம் அருகே கோட்டை வேங்கைபட்டி சாலையில் சந்தேகப்படும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
இதைப்பார்த்த போலீசார் அவரிடம் சென்று விசாரணை செய்ததில், அந்த நபர் மதுபோதையில் இருந்ததும், மதுரை மாவட்டத்தில் உள்ள கொடுக்கம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த பாண்டி என்பதும் தெரியவந்தது. மேற்கொண்டு போலீசார் கேட்ட கேள்விக்கும் அந்த நபர் முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளார்.
இதனால் மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனை செய்தபோது அவரிடம் ரூ.90 ஆயிரம் ரொக்கப் பணமும், 500 கிராம் கஞ்சா இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர் வைத்திருந்த பணம் மற்றும் கஞ்சா பற்றி போலீசார் விசாரித்துள்ளனர். ஆனால் அந்த நபர் மதுபோதையில் இருந்ததால் அவரிடம் இருந்து எந்த தகவலையும் போலீசாரால் வாங்க முடியவில்லை.
மேலும், இந்த நபர் கஞ்சா வுடன் சிக்கி இருப்பதால் கஞ்சா வியாபாரியாக இருக்கலாம் என்றும், அவர் வைத்திருந்த பணம் கஞ்சாவை விற்ற பணமாக இருக்கலாம் என்றும் தெரிகிறது. இதையடுத்து போலீசார் அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.