நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகிலுள்ள தீட்டுக்கல் பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் குத்தகை அடிப்படையில் மத்திய அரசின் மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இந்த ஆராய்ச்சி மைய வளாகத்தில் ஏராளமான மரங்கள் இருக்கின்றன. இந்த வளாகத்தில் காற்று, மழைக்காலங்களில் முறிந்து விழும் அபாயத்திலிருக்கும் மரங்கள் என்ற பெயரில் 370 ராட்சத யூக்காலிப்டஸ் மற்றும் சீகை மரங்களை கடந்த செப்டம்பர் மாதம் வெட்டி அகற்றியிருக்கின்றனர்.

இந்த நிலையில், வனத்துறையிடம் உரிய அனுமதியைப் பெறாமலயே 370 மரங்களை ஆராய்ச்சி மையம் தன்னிச்சையாக வெட்டியிருப்பதாக வனத்துறைக்கு புகார் வந்திருக்கிறது. இதன் அடிப்படையில், வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர், அனுமதி பெறாமல் மரங்களை வெட்டியது தொடர்பாக 48 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என வனத்துறை சார்பில் பரிந்துரை கடிதம் அனுப்பபட்டது.
இதைத் தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவரும் வனத்துறையைச் சேர்ந்த சிலரும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது பற்றி மத்திய மண்வள ஆராய்ச்சி மையத்திடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. மேலும், இதற்கு உடந்தையாக இருந்த வனச்சரகர் நவீன், வனக்காப்பாளர் பாபு, வனவர் சசி ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கின்றனர்.

இது குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரிகள், “வனத்துறைக்குச் சொந்தமான காப்புக் காட்டில் எந்தவித அனுமதியும் இல்லாமல் இவ்வளவு மரங்களை வெட்டியிருக்கிறார்கள். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு டேராடூனில் உள்ள மத்திய மண் மற்றும் நீர் ஆராய்ச்சி மைய தலைமையகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக வனச்சரகர் உள்ளிட்ட 3 வனத்துறை பணியாளர்களை சஸ்பெண்ட் செய்திருக்கிறோம். இதைத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.