பொங்கல் பண்டிகை முன்னிட்டு மக்களுக்கு பரிசாக ரூ.1,000 வழங்குவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தின் முடிவில் பொங்கல் பரிசு தொகப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது
இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த பரிசு தொகுப்பு வரும் ஜனவரி 2ஆம் தேதி முதல் அனைத்து நியாய விலை கடைகளிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.