தூத்துக்குடி மாவட்டத்தில் கார் லாரி மோதிய விபத்தில் அண்ணன் தங்கை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் வையகவுண்டர்பட்டி பகுதியை சேர்ந்தவர் பால் முத்துபிரபு (39). இவரும், இவரது தங்கை சுதா சற்குணவள்ளி (37) குடும்பத்தாரும் நேற்று காலை காரில் திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்தனர். பின்பு அங்கிருந்து மீண்டும் மதியம் அனைவரும் காரில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது மதியம் 2 மணி அளவில் ஆத்தூர் அருகே வந்தபோது அவ்வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக காரின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் பால் முத்துபிரபு மற்றும் அவரது தங்கையின் மாமியார் தமிழ்ச்செல்வி ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், காரின் இடிப்பாடுகளில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் 7 பேரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுதா சற்குணவள்ளி உயிரிழந்துள்ளார்.
மற்ற ஆறு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.