‘ஜி – 20’ அமைப்புக்கு தலைமை ஏற்றுள்ளதன் வாயிலாக, இந்தியாவின் ஆளுமையையும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைப் பண்பையும் உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கும் பணியை முன்னெடுத்து செல்ல, மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்களை பா.ஜ., அரசு இப்போதே தயார் செய்ய துவங்கி உள்ளது.
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 20 நாடுகளை உள்ளடக்கிய அமைப்பு, ஜி – 20 என அழைக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு
உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கும், உலக வர்த்தகத்தில் 80 சதவீதமும், சர்வதேச அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 90 சதவீத பங்களிப்பையும் அளிக்கும் நாடுகள், இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.
இந்நிலையில், ஜி – 20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இந்த மாபெரும் பொறுப்பை கடந்த 1ம் தேதி முதல் இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது. இத்துடன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஜி -20 மாநாட்டையும் இந்தியா தலைமையேற்று நடத்த உள்ளது.
புதுடில்லியில் நடக்கவுள்ள, இந்த மாநாட்டுக்கு முன்னதாக, இது தொடர்பான பல்வேறு கூட்டங்களை நாட்டின் பிற மாநிலங்களில் பரவலாக நடத்த பா.ஜ., அரசு திட்டமிட்டு உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மகாபலிபுரம், கோவை ஆகிய இடங்களில் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வாய்ப்பு
யூனியன் பிரதேசமான புதுச்சேரியும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதில், ஜி – 20 அமைப்பில் இடம் பெற்றுள்ள பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
இதற்கான திட்டமிடல் பணியை மத்திய அரசு இப்போதே துவக்கி விட்டது. இந்த வரிசையில், புதுடில்லியில் சமீபத்தில் நடந்த பா.ஜ., பார்லிமென்ட் குழு கூட்டத்தில், ஜி – 20 மாநாடு குறித்து நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விரிவான விளக்கம் அளித்து உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உட்பட பல எம்.பி.,க்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், ஜி – 20 மாநாட்டுக்கு தலைமை ஏற்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருப்பதை, பிரதமர் மோடி அரசின் மாபெரும் சாதனையாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
மாநாட்டின் முக்கியத்துவம், இதில் பங்கேற்கும் மாநில தலைவர்கள், அரசுக்கு தலைமை பொறுப்பு வகிப்பவர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும் பொறுப்பில் உள்ளவர்களின் கடமை குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கினார்.
பசுமை புரட்சி
இந்த மாநாட்டில், நம் கலாசார நிகழ்வுகள், பிராந்திய அளவிலான பண்டிகைகள், தொழில்நுட்பம், தினை உள்ளிட்ட சிறு தானிய உணவு வகைகள், பசுமை புரட்சி மற்றும் நிலைதன்மையுள்ள திட்டங்கள், ஒரு மாவட்டம்; ஒரே உற்பத்தி, சமூக கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நம் நாட்டின் ஆளுமை குறித்து எடுத்துரைக்க, முடிவு செய்யப்பட்டது.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, 2023ம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக ஐ.நா., அறிவித்துள்ளது. இதை கொண்டாடும் வகையில், ஜி – 20 மாநாட்டின் போது வருகை தரும் பிற நாட்டு பிரதிநிதிகளுக்கு தினை, கம்பு உள்ளிட்ட சிறு தானியங்களில் செய்யப்பட்ட உணவு வகைகள் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கும்படி பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
மேலும், அமைச்சர்கள், எம்.பி.,க்கள் நடத்தும் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் சிறுதானிய உணவுகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி பிரதமர் கேட்டுக் கொண்டார்.
நம் நாட்டில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள 85 சதவீதம் பேர் சிறு விவசாயிகளாக உள்ளனர்.
இவர்கள் தினை சாகுபடியில் ஈடுபட்டு இருப்பதால் தினை பயன்பாடு அதிகரிப்பது பொருளாதார ரீதியாக அவர்களுக்கு பலன் அளிக்கும் என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார்.
– நமது சிறப்பு நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்