ரேஷன் கடைகளில் அரிசி பிரிவில் முன்னுரிமை கார்டுதாரர்களுக்கு ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ அரிசி, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு 35 கிலோ அரிசி, முன்னுரிமையற்ற கார்டுதாரர்களுக்கு அதிகபட்சம் 20 கிலோ அரிசி மாதம்தோறும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த அரிசியை, மத்திய அரசின் இந்திய உணவு கழகம் ஒதுக்கீடு செய்கிறது. தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை, பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசியாக மாற்றி, கார்டுதாரர்களுக்கு வழங்குகிறது.
சென்னை, தர்மபுரி உட்பட மூன்று, நான்கு மாவட்டங்களில் மட்டுமே பச்சரிசி பயன்பாடு உள்ளது. மற்ற மாவட்டங்களில் புழுங்கல் அரிசிக்குத்தான் தேவை அதிகம் உள்ளது. இதனால், மத்திய தொகுப்பில் இருந்து புழுங்கல் அரிசி அதிகம் பெறப்படுகிறது.
தமிழக அரசு, 2.19 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக தலா 1,000 ரூபாய் ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்க உள்ளது. அவற்றின் விநியோகம் ஜனவரி 2-ம் தேதி தொடங்குகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் கிடைக்கும் பச்சரிசி, மற்ற அரிசியை விட ‘பளீச்’ என வெள்ளை நிறத்தில் நீளமாக இருக்கும். இது சுவையாக இருப்பதுடன், பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். எனவே, பொங்கல் பரிசுத் தொகுப்பில் பஞ்சாப் பச்சரிசியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அரிசி, மத்திய தொகுப்பில் இருந்து கிலோ 35.20 ரூபாய் விலைக்கு, 2.19 கோடி கிலோ வாங்கப்பட உள்ளது.