கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே நத்தமலை கிராமத்தில் ஏழை மக்களின்வாழ்வாதாரத்தை உயர்த்திய முஸ்லிம் பிரமுகரின் பெயரை தெருவுக்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காட்டுமன்னார்கோவில் அருகே நத்தமலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கொட்டாரம் தெரு உள்ளது. இந்த தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இந்து குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஏழை, எளிய மக்களாவார்கள். இந்நிலையில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த முகமது அல்பர் காஷ் என்பவர் சவுதி அரேபியாவில் ஒரு நிறுவனம் நடத்தி வந்தார்.
இந்த நிறுவனத்திற்கு நத்தமலை கொட்டாரம் தெருவில் இருந்து பணிக்கு ஆட்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். மனிதநேயமிக்க அந்த நபரின் செயலால் இந்த தெருவைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொண்டனர். அந்த தெரு மக்கள் தற்போது நல்ல நிலையில் வசதி, வாய்ப்புகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் முகமது அல்பர் காஷ் சென்ற ஆண்டு உயிரிழந்தார். இதனால் அந்த தெரு மக்கள் மீளா துயரில் ஆழ்ந்தனர். தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய முகமது அல்பர் காஷ்-க்கு இந்த பகுதி மக்கள் நன்றியுடன் அவரின் புகழ் தொடர்ந்து நிலைத்து நிற்க வேண்டி தங்களது கிராமத்தில் ஐந்தாவது வார்டுக்குட்பட்ட கொட்டாரம் தெருவின் பெயரை ‘முகமது அல்பர் காஷ் தெரு’ என்று மாற்ற வேண்டும் என்று விஸ்வநாதன் என்பவர் ஊராட்சித் தலைவர் பாலுவிடம் மனு அளித்து கோரிக்கை வைத்தார். இதனையடுத்து நத்தமலை ஊராட்சியில் அண்மையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கொட்டாரம் தெருவை முகமது அல்பர் காஷ் தெருவாக மாற்றம் செய்ய ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று ஊராட்சித் தலைவர் பாலு, கொட்டாரம் தெருவை முகமது அல்பர் காஷ் தெருவாக மாற்றுவதற்காக பெறப்பட்ட மனுக்கள் மற்றும் ஊராட்சி தீர்மான நகல் ஆகியவற்றை காட்டுமன்னார் கோவில் வட்டாட்சியர் வேணியிடம் அளித்து பெயர் மாற்றத்திற்கு பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டார். கிராம முக்கியஸ்தர், வார்டு உறுப்பினர், கிராம நிர்வாக அலுவலர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.