சென்னை: அதிமுகவை இணைக்க பேச்சு நடப்பதாக கூறுவது பொய் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழகத்தை சுனாமி தாக்கிய நிகழ்வின் 18 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (டிச.26) காசிமேடு கடற்கரை பகுதியில் அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுது, அவர் திமுகவின் பி டீமாக உள்ளார் என்பதை காட்டுகிறது. அவர் திமுகவிற்கு பணியாற்றுகிறார் என்று தான் நான் எடுத்துக் கொள்வேன்.அவரை வளர்த்த இயக்கத்தை சிறுமைப்படுத்தும் செயலை அவர் செய்ய வேண்டாம் என்பது தான் எனது வேண்டுகோள்.
அதிமுகவை இணைக்க பேச்சு நடப்பதாக கூறுவது வடிகட்டிய பொய். சசிகலாவுக்கும், கட்சிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. எடப்பாடி தலைமையில் கட்சி ஒற்றுமையாகத் தான் உள்ளது. சசிகலா கூறுவது முழுவதும் வடிகட்டிய பொய். பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்தவர் சசிகலா” என்றார்.
பொங்கல் பரிசு பற்றி அவர் கூறுகையில், “திமுக அரசு பொங்கல் பரிசாக ரூ. 5,000 வழங்கலாமே. அதிமுக ஆட்சியில் எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் பாரபட்சமின்றி பொங்கல் பரிசு வழங்கினோம். ஆனால் திமுக ஆட்சியில் குறிப்பிட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ.1000 வழங்கப்படுகிறது” என்றார்.