சென்னை: சாலையில் தவறவிட்ட 40 சவரன் தங்க நகை – 2மணி நேரத்தில் மீட்ட போலீசாருக்கு பாராட்டு

ஆவடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையில் தவறவிட்ட சுமார் 40 சவரன் தங்க நகைகளை 2 மணி நேரத்தில் மீட்ட போலீஸார் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
ஆவடி அருகே திருல்லைவாயல் நாகாத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகி (48). இவரது மகன் ஹரிஷ் சங்கர் (25). கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்பழகி, தனது மகன் ஹரிஷ் சங்கருடன் இருசக்கர வாகனத்தில் சுமார் 40 சவரன் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு, அதே பகுதி ஜாக் நகரில் வசிக்கும் சகோதரி வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர், அங்கு சென்று சகோதரியிடம் நகைகளை கொடுக்க பையை பார்த்த போது, பையை காணாததைக் கண்டு அதிர்ச்சிடைந்தார்.
image
இந்நிலையில், திருமுல்லைவாயல் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அன்பழகி புகார் செய்தார். புகாரின் பேரில், உதவி ஆய்வாளர் பழனி தலைமையிலான போலீசார் விரைவாக செயல்பட்டு அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை 2 மணி நேரமாக ஆய்வு செய்தனர். அதில், இரு சக்கர வாகனத்தில் வலது புறமாக முந்திச் சென்றபோது அன்பழகி வைத்திருந்த பை நகையோடு கீழே சாலையில் விழுந்துள்ளது தெரியவந்தது.
அதை அங்கிருந்த வீட்டின் நபர் ஒருவர் எடுத்து வைத்து யாரெனும் வருகிறார்களா என பார்த்து கொண்டிருந்தார். அதற்குள் போலீசார் துரிதமாக செயல்பட்டு அந்த இடத்திற்கு விரைந்து சென்று அவரிடம் இருந்து 40 பவுன் தங்க நகைகளை மீட்டனர். பின்னர், ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் மூலமாக, அன்பழகி மற்றும் அவரது மகன் ஹரிசங்கர் ஆகியோரை நேற்று ஆவடி ஆணையரகத்திற்கு அழைத்து ஒப்படைத்தனர்.
image
விலை உயர்ந்த பொருட்களை கொண்டு செல்லும்போது கவனமாக இருக்கும்படி அறிவுறுத்திய காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், தவற விட்ட நகைகளை விரைவாக கண்டுபிடித்த உதவி ஆய்வாளர் பழனியை பாராட்டி பரிசளித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.