‛துணிவு' டிரைலர் வெளியீடு : தெறிக்க விடலாமா என ரசிகர்கள் கொண்டாட்டம்

வினோத் இயக்கத்தில் அஜித்து நடித்துள்ள ‛துணிவு' படம் பொங்கலுக்கு வெளியாகிறது. தொடர்ந்து பட அப்டேட்டை வெளியிட்டு வருகின்றனர் படக்குழுவினர். சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா என மூன்று பாடல்களை சில நாட்கள் இடைவெளி விட்டு அடுத்தடுத்து வெளியிட்டனர். இந்தபாடல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கேரக்டர்கள் மற்றும் போஸ்டர்களை நேற்று வெளியிட்டனர். அதில் மைப்பாவாக பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம், பிரேமாக பிரேம், ராஜேஷாக பக்ஸ், கிரிஷ்-ஆக ஜாக் கொக்கன், ராதாவாக வீரா, முத்தழகனாக ஜிஎம் சுந்தர், ராமச்சந்திரனாக அஜய், தயாளனாக சமுத்திரகனி, கண்மணியாக மஞ்சுவாரியர் நடிப்பதாக அறிவித்துள்ளனர். தொடர்ந்து புத்தாண்டை முன்னிட்டு இன்று(டிச., 31) மாலை 7மணியளவில் டிரைலரை வெளியிட்டனர்.

1:51 நிமிடம் ஓடும் இந்த டிரைலரில், பிஸியான வங்கி ஒன்றில் கொள்ளையடிக்க அஜித் குழுவினர் நுழைகின்றனர். அங்குள்ளவர்களை பிணய கைதிகளாக பிடித்து வங்கியில் உள்ள பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். போலீஸ் சுற்றி வளைக்க தேசிய அளவில் இந்த செய்தி பரபரப்பாகிறது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருப்பது தெரிகிறது.

டிரைலரில் ஆக் ஷன், துப்பாக்கி, வெடி சத்தம் ஆகியவை கேட்டாலும் மங்காத்தா பாணியில் அஜித் செய்யும் சில மேனரிசங்கள் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. ‛‛மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறேயே வெட்கமா இல்ல என பிரேம் கேட்க அதற்கு அஜித் சிரித்து கொண்டே இல்ல என சொல்வது, ஹீரோ வேலைய நான் பாத்துக்குறேன், என்ன மாதிரி ஒரு அயோக்கிய பய மேல கை வைக்கலாமா…'' போன்ற வசனங்களில் அவர் சிரித்துக் கொண்டே பேசுவது ரசிகர்களை ஈர்த்துள்ளது. குறிப்பாக வங்கியில் துப்பாக்கி உடன் அவர் ஆடும் நடனம் வித்தியாசமான அஜித்தை பார்க்க வைத்துள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

டிரைலர் வெளியான 15 நிமிடங்களிலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்தது. தொடர்ந்து துணிவு பட டிரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருவதுடன் டிரெண்ட் செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.