மின்சாரம் தாக்கி சிறுவன் பலி பெற்றோருக்கு 12 வாரத்தில் நிவாரணம் வழங்க உத்தரவு

மதுரை: விருதுநகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். பார்வை குறைபாடுடையவர். இவரது மனைவி விஜயராணி. கூலித்தொழிலாளி. இவர்களின் மகன் நந்தகுமார், அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்தார். கடந்த 4.11.2017ல் ஆரம்ப சுகாதார மையத்தின் அருகே நண்பர்களுடன் விளையாடினார். அப்போது அங்கிருந்த ஸ்விட்ச் பெட்டியில் விழுந்ததில் மின்சாரம் தாக்கி பலியானார்.  மகன் இறப்பிற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கோரி கடந்த 2019ல் ஐகோர்ட் மதுரை கிளையில் பெற்றோர் மனு செய்தனர்.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அரசு சிறப்பு பிளீடர் லிங்கத்துரை ஆஜராகி, ‘‘மனுதாரர் குறிப்பிடும் நாளன்று பள்ளி விடுமுறை. அரசு அதிகாரிகள் பயிற்சி வகுப்பிற்காக சென்று விட்டனர். குழந்தைகளின் கவனக்குறைவால் விபத்து நடந்தது. இதற்கு அதிகாரிகள் பொறுப்பாக முடியாது’’ என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் வழங்க கலெக்டர் பரிந்துரைத்துள்ளார். எனவே, இந்த நிவாரணத்தை 12 வாரங்களில் பெற்றுத் தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.