
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த பேரிடர் நிவாரண அமைப்பு, தீயணைப்புத்துறை, வருவாய் துறை ஆகியவற்றின் சார்பில் வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது எப்படி? என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
அந்த வகையில் பத்தனம்திட்டா அருகே கல்லுப்பாறை பகுதியில் உள்ள ஆற்றில் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக நீச்சல் தெரிந்த 4 பேர் அங்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை வைத்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது.
இதில் பங்கேற்ற பினு சோமன் (35) எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கினார். அவருக்கு நீச்சல் தெரியும் என்ற போதிலும் ஆழமான பகுதியில் மூழ்கியதால் அவரை உடனடியாக காப்பாற்ற முடியவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு பினு சோமனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியின் போது வாலிபர் ஆற்றில் மூழ்கி இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியின் போது முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும், ஆற்றில் மூழ்கிய வாலிபரை கொண்டு சென்ற ஆம்புலன்சில் போதிய வசதி இல்லை என்றும் அந்த பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.