
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக, ரிமோட் வாக்குப்பதிவு முறையை கொண்டுவர தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதற்கான செயல்முறை விளக்க கூட்டம் டெல்லியில் வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க, அதிமுகவுக்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதிமுக பொதுக்குழு செல்லும் என ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கு இடைக்கால தடை பிறப்பிக்காத நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றுகடிதம் வந்ததால் அதிமுகவில் ஒரு தரப்பினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேரில் கடிதம் வழங்கிய போது, ஒருங்கிணைப்பாளர் என யாரும் இல்லை என்று கூறி கடிதத்தை வாங்க மறுத்துவிட்டனர். தேர்தல் ஆணைய ஆவணங்களின்படியே அதிமுகவுக்கு கடிதம் அனுப்பியதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்தார்.
இந்நிலையில், அதே கடிதத்தை மீண்டும் தபால் மூலமாக அதிமுக அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. இதனால் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்றே பார்க்கப்படுகிறது.
newstm.im