கீவ் : புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, உக்ரைனின் கீவ் நகரம் மீது, ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. 11 மாதங்களாக நீடித்து வரும் சண்டையால், உக்ரைன் நாட்டின் பல நகரங்கள் உருக்குலைந்துள்ளன.
உக்ரைன் நாட்டு வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மின் கட்டமைப்புகள், மின் நிலையங்களை குறி வைத்து, ரஷ்யா நடத்தும் வான்வழித் தாக்குதல்களால் உக்ரைன் நாட்டில் பல இடங்களில் மின்தடை நிலவுகிறது.
கடந்த 29ம் தேதி உக்ரைன் தலைநகர் கீவ் மீது 120 ஏவுகணைகள் வீசப்பட்டதால், மின் கட்டமைப்புகள் சேதமடைந்து, அங்கு வசிக்கும் மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, கீவ் நகர் மீது ரஷ்யப் படைகள் மீண்டும் ஏவுகணை மழை பொழிந்தன.புத்தாண்டு பிறந்து அரை மணி நேரத்தில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதலால், அங்கு எஞ்சியிருந்த மின் அமைப்புகளும் தீக்கிரையாகின.
உக்ரைன் நாட்டின் புத்தாண்டு கொண்டாட்டத்தை சீர்குலைக்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இல்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement