
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போதைப் பொருள் கலாச்சாரம் விஸ்வரூபமாக உருவெடுத்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசாங்க அலுவலகப் பணிகளில் தலையிடுவது, அரசு ஊழியர்களை மிரட்டுவது, பொதுமக்களை மிரட்டுவது, பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது என்ற வரிசையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல் துறையினருக்கே பாலியல் தொந்தரவு கொடுக்கும் நிலைக்கு திமுகவினர் சென்றுவிட்டார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. மாறாக, சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று ஓ.பி.எஸ். விமர்சித்துள்ளார். இன்னும் சொல்லப் போனால், தீவிரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் புகலிடமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது என்று அவர் சாடினார்.சென்னை, விருகம்பாக்கத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த திமுகவினரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தபோது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின்னர் ஆளும் கட்சியினரின் தலையீட்டைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவல் துறையினர் விட்டுவிட்டதாகவும் செய்திகள் வந்ததாக ஓ.பி.எஸ். குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க.வினரின் இந்த அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று கூறிய அவர், குற்றம் செய்வோரை விடுவித்து விடுவது என்பது குற்றங்களை அதிகரிக்க வழிவகுக்கும் என்றார். இதன்மூலம், கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக சீரழிந்து கொண்டு வருகின்ற சட்டம்-ஒழுங்கு மேலும் சீரழியக் கூடும் என்றார். மேலும், பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை விடுவிப்பது என்பது பாலியல் குற்றத்திற்கு திமுக அரசு துணை போவதற்கு சமம் என்று சாடினார்.

இதே போன்று பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்த ஓ.பன்னீர்செல்வம், இந்த நிலை நீடித்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்குகின்ற சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், காவல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திமுகவினரை உடனடியாக கைது செய்து, சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
newstm.in