புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தாங்ரி என்ற கிராமத்தில் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 4 வயது குழந்தை உட்பட 6 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகள் சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். மறுநாள் இந்த இடத்துக்கு அருகில் விகான் சர்மா (4), சமிக் ஷா சர்மா (16) ஆகிய இருவர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தனர்.
இந்நிலையில் காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜவுரி மாவட்டத்தில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக கூடுதலாக 1,800 வீரர்களை சிஆர்பிஎப் அனுப்பியுள்ளது. இதில் 900 பேர் ஏற்கெனவே ரஜவுரியை அடைந்துவிட்ட நிலையில் எஞ்சியவர்கள் அங்கு சென்றுகொண்டிருப்பதாக அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.