மக்கள் இயக்க நிர்வாகி மரணம்; ரஜினிகாந்த் இரங்கல்..!

ரஜினிகாந்த் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர் உடல் நலக்குறைவால் சற்று முன் காலமானார். அவருக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் மன்றம் மற்றும் மக்கள் இயக்கத்தை கவனித்து வந்தவர் வி.எம்.சுதாகர். பல்வேறு சூழல்களிலும் ரஜினி மக்க மன்றத்தினரையும், ரசிகர்களையும் நெறிப்படுத்தியும் வழிநடத்தியும் வந்தவர் சுதாகர். அத்துடன், ரஜினியின் நலத்திட்டங்கள் குறித்த தகவல்களையும் அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.

குறிப்பாக, ரஜினியின் உடல்நலம் குறித்த தகவல்களுக்காக ரசிகர்களும் ஊடகங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த முந்தைய சமயங்களில், சுதாகரே அந்த செய்திகளை உடனுக்குடன் தெரிவித்து அனைவரையும் ஆசுவாசப்படுத்துவார். ரசிகர்களின் பதட்டத்தை தணிப்பார்.

இந்நிலையில், சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுதாகருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் சற்று முன் உயிரிழந்தார்.அவரது மரணம் நடிகர் ரஜினிகாந்தையும், அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுதாகரின் மரணம் குறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ள ரஜினிகாந்த், “என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்” என இரங்கல் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.