ஆவின் நெய் தட்டுப்பாடு: அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன? டிடிவி தினகரன் கேள்வி!

ஆவின் நெய் தட்டுப்பாட்டை சமாளிக்க ஆவின் நிர்வாகமும், அரசும் என்ன செய்யப்போகிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் பால் மட்டுமின்றி வெண்ணெய், நெய் , பால்கோவா உள்ளிட்ட பல்வேறு பால் சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆவின் 1 லிட்டர் ப்ரீமியம் நெய் ரூ.630 லிருந்து ரூ.680 ஆகவும், அரை லிட்டர் நெய் ரூ.340 லிருந்து ரூ.365 ஆகவும் ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. டிசம்பர் 16ஆம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது. ஒன்பது மாதங்களில் மூன்றாவது முறையாக விலை உயர்த்தப்பட்டது.

விலை உயர்வுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தன. விலை உயர்வு ஒரு பக்கம் இருந்தால் நெய், வெண்ணெய் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடும் நிலவி வருகிறது. கடந்த தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு ஆவின் நெய் அதிக அளவில் தேவைப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் சிறு, சிறு பாலகங்கள் வைத்து நடத்தும் பால் முகவர்களுக்கு போதிய அளவு ஆவின் நெய் வழங்கப்படவில்லை.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகளவில் நெய் வாங்குவார்கள். ஆனால் தற்போது ஆவின் நெய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் தமிழக அரசு இதை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில் ஆவின் நெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது சரியானதல்ல.

ஆவின் பால் கொள்முதல் குறைந்துவருவதால் வெண்ணெய் மற்றும் நெய் தயாரிப்பதில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக வெளிவரும் செய்திகள் தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்றாக இருக்கிறது. இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க ஆவின் நிர்வாகமும், அரசும் என்ன செய்யப்போகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.