இலங்கைக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், அவுட் ஆகாமல் சதம் அடித்து அசத்தினார்.
முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இது தொடரை வெல்வதை நிர்ணயிக்கும் போட்டி. இந்நிலையில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
களமிறங்கிய இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் இஷன் கிஷன் முதல் ஓவரிலேயே 1 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து பவர்பிளே வரை அதிரடி காட்டிய ராகுல் திரிபாதி 16 பந்தில் 35 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
இதையடுத்து கில்லுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய சூர்ய குமார் யாதவ் சிக்சர்களை பறக்கவிட்டார். அதிரடியாக ஆடிய அவர் 21 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.
மறுபுறம் சுப்மன் கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதானமாக ஆடி வந்த சுப்மன் கில் 36 பந்தில் 46 ரன் எடுத்திருந்த நிலையில் ஹசரங்கா பந்து வீச்சில் போல்ட் ஆனார்.
கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா இருவரும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 45 பந்தில் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் தனது 3வது சதத்தை பதிவு செய்தார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் 112 ரன்கள் குவித்தார். இதையடுத்து தொடரை கைப்பற்ற இலங்கை அணிக்கு 229 ரன்களை இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.
newstm.in