கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து அதிக பயிர் சேதத்தை ஏற்படுத்துவதாக தடாகம் பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சின்ன தடாகம் அடுத்த பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சார்ந்த விவசாயி நரசிம்மராஜ் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த இரண்டு ஆண் யானைகள் மாடுகள் கட்டி வைக்கப்பட்டிருந்த அறைக்குள் புகுந்து அங்கிருந்த தவிடு, புண்ணாக்கு, மக்காச்சோள கருதுகளை சாப்பிட்டு சென்றது. இதனை தொடர்ந்து இன்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்த நரசிம்மராஜ் மாடுகள் கட்டப்பட்டிருந்த அறை முன்பு பொருட்கள் சேதமடைந்து இருப்பதை பார்த்து கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்த போது, அதிகாலை 1 மணிக்கு தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் மாடுகள் கட்டப்பட்டிருந்த அறைக்குள் செல்வதும் பின்னர் வெளியே வருவதும் தெரியவந்தது.
இது குறித்து நரசிம்மராஜ் கூறுகையில், மாடுகள் கட்டப்பட்டிருந்த அறைக்குள் சென்ற யானைகள் உணவு பொருட்களை மட்டும் சாப்பிட்டு சேதப்படுத்தியுள்ளது. மாடுகளை ஒன்றும் செய்யவில்லை, இதே போல் அருகில் உள்ள ரங்கசாமி, உதயகுமார் ஆகியோரின் தோட்டத்திற்குள்ளேயும், இந்த யானைகள் புகுந்து சேதப்படுத்தியுள்ளது. வனப் பகுதியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரம் உள்ள தங்களுடைய தோட்டத்திற்கு யானைகள் வந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து மாலை நேரத்தில் யானைகள் வெளியே வரும்போதே அவற்றை மீண்டும் வனத்திற்குள் விரட்டினால் மட்டுமே, யானைகளால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க முடியும் என தெரிவித்தார்.