தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் அனைத்து குடும்ப அட்டைதரர்களுக்கும் இலவசப் பரிசுத் தொகுப்பு வழக்கமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பொங்கல் பண்டிகை வர இருக்கும் நிலையில் புதுச்சேரியில் 500 ரூபாய் மதிப்பிலான 10 பொருட்களை இலவசமாக வழங்கிட புதுச்சேரி அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியானது.
குறிப்பாக பச்சரிசி, வெள்ளம், உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட இந்த 10 பொருட்கள் இருக்கக்கூடிய 500 ரூபாய் மதிப்பிலான இந்த தொகுப்பை வழங்குவதற்கு புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.இதற்கு அரசு ரூ.17.5 கோடி ஒதுக்கீடு செய்து டெண்டர் விதிமுறைகளை வெளியிட்டது.
ஆனால், டெண்டர் விதிமுறைப்படி யாரும் வராததால் பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் தர முடிவு எடுக்கப்பட்டது. அதற்கான கோப்பு தயாரிக்கப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் வந்தவுடன் விரைவில் பயனாளிகள் வங்கிக் கணக்கில் ரூ.470 தொகை செலுத்தப்படவுள்ளது. டெண்டர் விதிமுறைகளை மாற்றி மீண்டும் வெளியிட கால அவகாசம் இல்லாததால் இம்முடிவு எடுத்துள்ளதாக அரசு தரப்பில் குறிப்பிடுகின்றனர்.