செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் சுங்கவரி கட்டணத்தை எதிர்த்து போராட்டம்

செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் சுங்கவரி கட்டணத்தை எதிர்த்து சுங்கச்சாவடியை மூடக்கோரி 500-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். விக்கிரமராஜா, யுவராஜ் பொன்குமார், பி.ஆர்‌.பாண்டியன் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். செங்கல்பட்டை அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் சுங்கவரி கட்டணத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்பாட்டத்தில் ஏஐஎம்டிசி சேர்மன் சண்முகப்பா, தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் A.M.விக்கிரமராஜா, மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தன்ராஜ், கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சங்கத் தலைவர் பொன்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் P.R.பாண்டியன், இந்திய ரியல் எஸ்டேட் தலைவர் V.N.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் 15-லிருந்து 20- ஆண்டுகள் கடந்த நிலையிலும், இச்சாலை அமைப்பதற்காக செலவிடப்பட்ட மொத்த தொகையினை ஈட்டிய பிறகும் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் மத்திய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இச்சுங்கச்சாவடியை அகற்றியாக வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பலமுறை வலியுறுத்தியும் மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்க மறுப்பதாக கூறி கண்டன கோஷங்கள் முழங்கியும், பதாகைகள் ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து பேசிய லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தலைவர் யுவராஜ், 60 கிலோமீட்டர்க்கு இடையில் இருக்கும் சுங்கச் சாவடிகளை ஏற்க மாட்டோம் என்றும், இது மிக பெரிய விதி மீறல் என்றும் தமிழ்நாட்டை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தியும் எவ்வித மாறுதலும் காணப்படாதது மன வேதனையளிக்கிறது என போராட்டக்காரர்கள் கூறினர். 

தமிழ்நாட்டில் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் இருக்கக்கூடிய அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்றிடுவோம் என்று ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெற்று அறிக்கையளித்தார். ஆனாலும் மாற்றம் ஏற்படாதது ஓட்டுமொத்த வாகன உரிமையாளர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் ஏமாற்றத்தையே அளித்தது. இதனோடு இல்லாமல் காலாவதியான சுங்கச்சாவடிகளில் பராமரிப்புக்காக 40 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என்ற நெடுஞ்சாலைத்துறை அரசாணை இந்நாள் வரையில் நடைமுறை படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் இயங்கிவருகிறது, இருந்தாலும் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலையில் 55% வீதம் விபத்துக்கள் நடப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. 

ஆகவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பு கவனம் செலுத்தி சுங்கச்சாவடிகளை கண்காணிக்க தனிக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இக்கண்டன ஆர்பாட்டத்தின் மூலம் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறோம் என்றும் தெரிவித்தார்.

கட்டுமான தொழிலாளர்கள் கூட்டமைப்பு தலைவர் பொன் குமார் பேசுகையில், ‘ஆளுநர் என்பவர் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையேயான தூதுவர். மாநில அரசு சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் மத்திய அரசிடம் உள்ளது. அதனை ஆளுநர் மத்திய அரசிடம் பேசி இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். அதை விட்டு விட்டு தமிழ்நாட்டிற்கு தமிழகம் என பெயர் வைக்க வேண்டும், இலக்கியம் சரியில்லை என பேசும் வேலை அவர் வைத்திருக்கக் கூடாது. அந்த வேலையெல்லாம் வைத்துக் கொண்டிருந்தால் ராஜ் பவனை விட்டு வெளியே வந்து விட வேண்டும்’ என கூறினார். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.